சனத்தின் அதிரடியோடு T20 உலகக் கிண்ணத்தில் உலக சாதனை படைத்த இலங்கை

484

ஒரு காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சாதனைகளுக்கு பெயர் போன அணியாக காணப்பட்டது. அதிலும் குறிப்பாக சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இலங்கை அணிக்காக ஆடிய காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி சாதனைகள் செய்வது வாடிக்கையாக காணப்பட்டிருந்தது.

மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

நிலைமைகள் இவ்வாறிருக்க கடந்த 2005ஆம் ஆண்டில் T20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு, அதனை மேலும் பிரபல்யப்படுத்தப்படும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) முதலாவது T20 உலகக் கிண்ணத் தொடரினை, 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஒழுங்கு செய்திருந்தது.

இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி குழு C இல் நியூசிலாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுடன் களம் கண்டது.

தொடர்ந்து இலங்கை அணி குறித்த T20 உலகக் கிண்ணத்தில் முதலாவதாக விளையாடிய போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க் அரங்கில், கென்யாவுடன் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கென்ய அணியின் தலைவர் ஸ்டீவ் டிக்கலோ முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார். இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தனது முதல் விக்கெட்டினை பறிகொடுத்த போதும், ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்டவீரர் சனத் ஜயசூரிய மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் அரங்கு அதிரும் வகையில், கென்ய அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய தொடங்கினர்.

இதில் வெறும் 44 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சனத் ஜயசூரிய 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களைப் பெற, குறித்த போட்டியின் இலங்கை அணியினை வழிநடாத்திய மஹேல ஜயவர்தன வெறும் 27 பந்துகளுக்கு 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

2012 T20 உலகக் கிண்ணத்தில் களைக்கட்டிய அஜந்த மெண்டிஸின் மாய சுழல்!

இந்த இரண்டு வீரர்களினதும் அதிரடியினை அடுத்து குறித்த போட்டியின் மூலம் T20 சர்வதேச அறிமுகம் பெற்ற ஜெஹான் முபாரக்கின் அசூர ஆட்டமும் வெளிப்படுத்தப்பட்டது.

அதன்படி தனது கன்னிப் போட்டியில் வெறும் 14 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட ஜெஹான் முபாரக் 5 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 13 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற, இலங்கை கிரிக்கெட் அணி யாரும் எதிர்பாராத வகையில் 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்கள் குவித்து T20 போட்டி ஒன்றில் அணியொன்று அப்போது பெற்ற அதிகூடிய ஓட்டங்களை எடுத்து உலக சாதனை படைத்தது.

மறுமுனையில் இலங்கையின் துடுப்பாட்டவீரர்களை அப்போது எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் திணறிய கென்ய அணி குறித்த போட்டியில் மிகவும் மோசமான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அணியாக மோசமான வரலாற்றுச் சாதனை ஒன்றினையும் பதிவு செய்திருந்தது.

பந்துவீச்சில் இலங்கையிடம் வாங்கிக் கட்டியிருந்த கென்ய அணி, அதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக மாறிய இமாலய ஓட்டங்களான 261 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடி வெறும் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 172 ஓட்டங்களால் இலங்கை வீரர்களிடம் படுதோல்வி அடைந்தது.

கென்ய அணி 172 ஓட்டங்களால் அடைந்த தோல்வி இன்றுவரை அணியொன்று T20 போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் அடைந்த தோல்வியாக பார்க்கப்படுவதோடு, இலங்கை அணி பெற்ற 260 ஓட்டங்கள் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அணியொன்று எடுத்த அதிகூடிய ஓட்டங்களாக (அதாவது T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் உலக சாதனையாக இன்றுவரை) காணப்படுகின்றது.

அதேநேரம் இலங்கை அணி T20 சர்வதேசப் போட்டிகளில் பெற்ற கூடுதல் ஓட்ட (260 ஓட்டங்கள்) சாதனை 09 வருடங்கள் (2016ஆம் ஆண்டு வரை) முறியடிக்கப்படாமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<