மேல் மாகாண ஆடவர் மற்றும் வட மேல் மாகாண மகளிர் அணிகளுக்கு சம்பியன் கிண்ணம்

359

அண்மையில் நடைபெற்று முடிந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கால்பந்து சம்பியன்சிப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் மேல் மாகாண அணியும், மகளிர் பிரிவில் வட மேல் மாகாண அணியும் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆடவர் சம்பியன்சிப்

ஆடவர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் வட மேல் மாகாண அணியினரை எதிர்கொண்ட மேல் மாகாண அணியினர், போட்டி முடிவில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகினர்.  

போட்டியின் முதல் பாதி முடிவடையும்பொழுது 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்த மேல் மாகாண அணியினர் இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொண்டனர். அவ்வணி சார்பான மெஹமட் இஸ்ஸதீன், மெஹமட் பர்சீன் மற்றும் மொஹமட் ரமீஸ் ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

தமது அரை இறுதியில் சபரகமுவ மாகாண அணியினரை எதிர்கொண்ட மேல் மாகாண அணியினர் 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டனர். அப்போட்டியில் இஸ்ஸதீன் மற்றும் பர்சீன் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் போட, இறுதி கோலை சுபாஷ் சதுரங்க பெற்றுக்கொடுத்தார். போட்டியின் முதல் பாதியில் மேல் மாகாண அணியினர் 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தனர்.

அதேபோன்று, மற்றைய அரையிறுதியில் வட மேல் மாகாண அணி, வட மத்திய மாகாண அணியை எதிர்கொண்டது. அதில் போட்டி நேர முடிவின்போது இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. எனவே வெற்றியைத் தீர்மானிப்பதற்கு இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வட மேல் மாகாண அணி 6-5 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

மூன்றாம் இடத்திற்காக போட்டியில் சபரகமுவ மாகாண அணி, வட மத்திய மாகாண அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.

காலிறுதி முடிவுகள்

மேல் மாகாணம் 2 – 0 மத்திய மாகாணம்
சபரகமுவ மாகாணம் 1 – 0 ஊவா மாகாணம்
வட மத்திய மாகாணம் 2 – 1 தென் மாகாணம்
வட மேல் மாகாணம் 0 (6) – 0 (5) வட மாகாணம்

ஆடவர் பிரிவில் தொடரின் சிறப்பாட்டக்காரர் – மொஹமட் இஸ்ஸதீன்


மகளிர் சம்பியன்சிப்

ஆடவர் பிரிவைப் போன்றே, மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியிலும் மேல் மாகாண அணியும், வட மேல் மாகாண அணியும் மோதின. எனினும் இப்போட்டியில் வட மேல் மாகாண அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. அவ்வணியின் வெற்றி கோலை திலினி ஜயசிங்க பெற்றுக்கொடுத்தார்.

தொடரின் அரையிறுதியில் மேல் மாகாண மகளிர் அணி ஊவா மாகாண மகளிர் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கிலும், வட மத்திய மாகாண மகளிர் அணி, தென் மாகாண மகளிர் அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி கொண்டன.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஊவா மாகாண மகளிர் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் தென் மாகாண மகளிர் அணியை வெற்றி கொண்டது.

காலிறுதி முடிவுகள்

மேல் மாகாணம் 6 – 0 வட மாகாணம்
ஊவா மாகாணம் 4 – 0 மத்திய மாகாணம்
தென் மாகாணம் – வட மத்திய மாகாணம் (வோக் ஓவர் மூலம் தென் மாகாணம் வெற்றி)
வட மேல் மாகாணம் 8 – 0 கிழக்கு மாகாணம்

மகளிர் பிரிவில் தொடரின் சிறப்பாட்டக்காரர் – திலினி ஜயசிங்க