மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் ஷிம்ரொன் ஹெட்மயர்

311

இந்தியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷிம்ரொன் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷானே தோமஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.  

அதேபோல, முன்னாள் தலைவர்களான நிக்கொலஸ் பூரன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.   

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி பார்படோஸில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள்; அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷாய் ஹோப் தலைவரகவும், ரோவ்மன் பவல் உதவி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான நிக்கொலஸ் பூரன், அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற மேஜர் லீக் T20 தொடரில் MI நிவ்யோர்க் அணிக்காக விளையாடி வருவதால் இந்திய ஒருநாள் தொடருக்காக பெயரிடப்படவில்லை. அதேபோல. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.   

மாறாக, அதிரடி வீரரான ஷிம்ரொன் ஹெட்மயர் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு T20 உலக கிண்ணத்தில் அணி நிர்வாகத்துடன் முரண்பாடுகள் ஏற்பட்டு விமானத்தை தவறவிட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். மீண்டும் புதிய அணியை உருவாக்க அவரை அணிக்குள் கொண்டுவர அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வேகப் பந்துவீச்சாளரான ஓஷானே தோமஸூம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ், லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் யானிக் கரியா மற்றும் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குடாகேஷ் மோட்டி உட்பட மூன்று வீரர்கள் தங்கள் காயங்களில் இருந்து குணமடைந்து இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பியுள்ளனர். 

மேற்கந்திய தீவுகள் அணி விபரம்  

ஷாய் ஹோப் (தலைவர்), ரோவ்மேன் பவல் (உதவி தலைவர்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரொன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷானே தோமஸ் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<