பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்

1001

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிகெட் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அவுஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமானது.  

கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்திய இலங்கை

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டியின் விஷேட அம்சமாக பாகிஸ்தான் அணி சார்பாக பிலால் ஆஷிப் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக இணைக்கப்பட்டிருந்ததுடன் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரோன் பின்ஞ்ச், திரவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஸ்சங்னே (Marnus Labuschagne) ஆகிய மூவரும் டெஸ்ட் போட்டிகளில் தமது அறிமுகத்தை பெற்றிருந்தனர்.

தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெறக் கூடியதாக இருந்தது. இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 205 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இமாம் உல் ஹக் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹபீஸ் டெஸ்ட் போட்டிகளில் 10ஆவது சதம் கடந்து 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  தொடர்நது களமிறங்கிய அஸார் அலி 18 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் அப்பாஸ் ஒரு ஓட்டம் என குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது.

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த ஹரிஸ் சொஹைல் மற்றும் அசாட் ஷபீக் ஜோடி 150 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற பாகிஸ்தான் அணி வலுவான நிலையை அடைந்தது. அசாட் ஷபீக் 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் சிறப்பாக விளையாடிய ஹரிஸ் சொஹைல் டெஸ்ட் போட்டிகளில் கன்னிச்சதம் கடந்து 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் பீட்டர் சிட்ல் மூன்று விக்கெட்டுகளையும் நேதன் லியொன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் பின்ஞ்ச் ஆகியோரின் ஆட்டம் பாகிஸ்தான் அணியை நிலைகுலைய செய்திருந்தது. எனினும் முதலாவது விக்கெட்டாக ஆரோன் பின்ஞ்ச் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக பாகிஸ்தான் அணியை விட 280 ஓட்டங்களால் பின்தங்கி இருந்தது. அவுஸ்திரேலிய அணி 142 ஓட்டங்களை முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றிருந்த போதும் கடைசி 60 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு பிரச்சினைக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லவுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ்

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கவாஜா 85 ஓட்டங்களையும் தனது முதலாவது போட்டியில் விளையாடிய ஆரோன் பின்ஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் பிலால் ஆஷிப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் மொஹமட் அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

280 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழந்து 181 ஓட்டங்களை பெற்றிருந்த போது 462 ஓட்டங்களை அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்து தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சில் அதிக பட்சமாக இமாம் உல் ஹக் 48 ஓட்டங்களை பெற்றிருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் ஜோன் ஹோலன்ட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.  

462 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி சிறந்த ஆரம்பத்தை பெற்று 87 ஓட்டங்களை முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்ற போதும் அதே ஓட்ட எண்ணிக்கையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் நான்காவது விக்கெட்டுகாக உஸ்மான் கவாஜா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஜோடி பிரிக்கப்படாத 49 ஓட்டங்களை பெற்றிருந்தது. நேற்றைய (10) நான்காவது நாள் ஆட்ட நிறைவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றிருந்தது.

7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் வெற்றி பெறுவதற்கு  மேலும் 326 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இன்று (11) ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி இன்றைய நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 362 பெற்றதன் மூலம் இன்றைய போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இன்றைய தினம் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 132 ஓட்டங்களை பெற்றிருந்த போது ட்ராவிஸ் ஹெட் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது ஆசிய மண்ணில் நான்காவது இன்னிங்சுக்காக அவுஸ்திரேலிய அணியினரால் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டமாகும்.

மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா மற்றும் அணித் தலைவர் டிம் பெய்னி ஆகிய இருவரும் இணைந்து 79 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது  சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 141 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அடுத்தடுத்து இன்னும் இரு விக்கெட்டுகளை இழந்து இன்றைய நாள் நிறைவடைய மேலும் 12.2 ஓவர்கள் எஞ்சிய நிலையில்  333 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் அவுஸ்திரேலிய அணி காணப்பட்டது. கடைசி 74 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினால் வெற்றி என்றிருந்த பாகிஸ்தான் அணிக்கு டிம் பெய்னி மற்றும் நேதன் லியொன் ஆகியோரின் பிரிக்கப்படாத இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவை தகர்த்தது. டிம் பெய்னி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் யாசிர் ஷாஹ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

“நேற்றைய போட்டியை திட்டமிட்டப்படி நகர்த்தியிருந்தோம்” – குசல் பெரேரா

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரு இன்னிங்சுகளிலும் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா தெரிவு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 482 (164.2) – மொஹமட் ஹபீஸ் 126, ஹரிஸ் சொஹைல் 110, அசாத் ஷபீக் 80, இமாம் உல் ஹக் 76, பீட்டர் சிட்ல் 58/3, நேஏதன் லியொன் 114/2

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 202 (83.3) – உஸ்மான் கவாஜா 85, ஆரோன் பின்ஞ்ச் 62, பிலால் ஆஷிப் 36/6, மொஹமட் அப்பாஸ் 29/4

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 181/6d (57.5) – இமாம் உல் ஹக் 48, அசாத் ஷபீக் 41, ஹரிஸ் சொஹைல் 39, ஜோன் ஹோலன்ட் 83/3, நேதன் லியொன் 58/2

அவுஸ்திரேலியா – (இரண்டாம் இன்னிங்ஸ்) – 362/8 (139.5) – உஸ்மான் கவாஜா 141, ட்ராவிஸ் ஹெட் 72, டிம் பெய்னி 61* யாசிர் ஷாஹ் 114/4, மொஹமட்அப்பாஸ் 56/3

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<