IPL தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வனிந்து, சமீர, பானுக & தீக்ஷன

Indian Premier League 2022

1915

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரில் இலங்கை வீரர்கள் பங்கேற்றிருப்பதுடன், இதுவரையில் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவருகின்றனர்.

ஆறு இலங்கை வீரர்கள் இம்முறை IPL தொடரில் பங்கேற்றுள்ளனர். வனிந்து ஹஸரங்க (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்), துஷ்மந்த சமீர (லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ்), பானுக ராஜபக்ஷ (பஞ்சாப் கிங்ஸ்), மஹீஷ் தீக்ஷன (சென்னை சுபர் கிங்ஸ்), சாமிக்க கருணாரத்ன (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் மதீஷ பதிரண (சென்னை சுபர் கிங்ஸ்) ஆகிய வீரர்களே இவ்வாறு இடம்பெற்றுள்ளனர்.

பானுக, தவானின் பிரகாசிப்புகளுடன் வெற்றிப்பாதைக்கு திரும்பிய பஞ்சாப் 

IPl தொடரில் பாதி போட்டிகள் தற்போது நிறைவுபெற்றுள்ள நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஹஸரங்க 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட மஹீஷ் தீக்ஷன முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை. எனினும், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் விளையாடிய இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், இம்முறை IPL தொடரில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ, 4 போட்டிகளில் விளையாடி 31.25 என்ற சராசரியுடனும், 183.83 என்ற ஓட்டவேகத்துடனும் 125 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர், முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடியிருந்த நிலையில், அடுத்த நான்கு போட்டிகளில் நீக்கப்பட்டிருந்தார். எனினும், நேற்றைய தினம் (25) நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் துஷ்மந்த சமீரவுக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆரம்பம் கிடைக்கவில்லை. இருப்பினும், 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி, 145 இற்கும் அதிகமான வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசும் இவர், சில போட்டிகளில் அதிவேக பந்துவீச்சாளராகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்களில் வெறும் 14 ஓட்டங்களை மாத்திரம் வழங்கியிருந்தார்.

இலங்கை அணியின் நான்கு வீரர்கள் ஏற்கனவே போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள, சாமிக்க கருணாரத்ன இதுவரை போட்டிகளில் இணைக்கப்படவில்லை. நட்சத்திர சகலதுறை வீரரான அன்ரே ரசல் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச்சிறப்பாக பிரகாசித்துவரும் நிலையில், சாமிக்கவுக்கு அணியில் இடம் கிடைப்பது கடினமான விடயமாக மாறியுள்ளது.

இதேவேளை, இறுதியாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரண சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இவர் உபாதைக்குள்ளான அடம் மில்னேவுக்கு பதிலாக 20 லட்சம் ரூபாவுக்காக வாங்கப்பட்டார். இவர் சென்னை சுபர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள நிலையில் நாளை (27) முதல் அணித்தெரிவுக்கு உள்வாங்கப்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<