சங்கக்கார, டில்ஷான், ஜயசூரியாவை பின்தள்ளிய கோஹ்லி

449

கிரிக்கெட் உலகின் ஓட்ட இயந்திரம் என்றழைக்கப்படுகின்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சமீபகாலமாக சாதனைகளை வாரிக் குவிக்கும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி தனது 39ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதனை 210 இன்னிங்ஸ்களில் கோஹ்லி அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது, விராட் கோஹ்லி அடித்த 24ஆவது சதமாகும். அத்துடன், 39ஆவது சதத்தை பூர்த்தி செய்ய, சச்சினுக்கு 350 இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆஸி மண்ணில் அவர்களை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா…

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 299 எனும் கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 4 பந்துகள் மீதிமிருக்கையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி இரண்டாவது போட்டியை வென்று, தொடரை சமன் செய்தது.

இந்நிலையில், இன்று நடந்து முடிந்த மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் கோஹ்லி 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து இந்திய அணி ஆஸி மண்ணில் அவர்களுக்கு எதிராக ஒருநாள் தொடரைக் கைப்பற்றுவதற்கும் உதவியிருந்தார்.

முதல் போட்டியில் ஏமாற்றிய நிலையில், 2வது போட்டியில் சிறப்பாக ஆடிய கோஹ்லி தனது ஒருநாள் அரங்கில் 39ஆவது சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லியின் பொறுப்பான துடுப்பாட்டம், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இதனால் குறித்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோஹ்லி பெற்றார்.

இதுஇவ்வாறிருக்க, கோஹ்லியின் சாதனைகள் பொதுவாக ஜனவரி 15ஆம் திகதி நிகழ்த்தப்பட்டு வருவது அதிசயமான ஒரு விடயமாக மாறிவிட்டது. தொடர்ந்து 3ஆவது வருடமாக இதே நாளில் கோஹ்லி சதம் அடித்துள்ளார். கடந்த 2017 ஜனவரி 15இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேயில் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் சதம், 2018 ஜனவரி 15இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்சூரியனில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் சதம், 2019 ஜனவரி 15இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஒருநாள் சதம் என ஜனவரி 15ஆம் திகதியில் அவர் சதங்களை குவித்து வருகின்றார்.

சங்கக்காரவை முந்திய கோஹ்லி

விராட் கோஹ்லி சர்வதேச போட்டிகளில் 64வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஒட்டுமொத்த சதங்களின் பட்டியலில் கோஹ்லி 3ஆவது இடத்தில் உள்ளார். சச்சின் 100 சதங்கள், ரிக்கி பொண்டிங் 71 சதங்கள், குமார் சங்காக்கரா 63 சதங்கள் அடித்துள்ளனர்.

வெளிநாட்டு சதங்களில் 2ஆவது இடம்

வெளிநாடுகளில் அடிக்கப்பட்ட சதங்களின் பட்டியலில் 22 சதங்களுடன் கோஹ்லி 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 29 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். 3ஆவது இடத்தில் சனத் ஜயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தலா 21 சதங்களுடன் உள்ளனர்.

அத்துடன், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கோஹ்லிக்கு இது 5ஆவது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த ரோஹித் சர்மா மற்றும் குமார் சங்கக்காரவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஒருநாள் ஓட்டங்களில் 11ஆவது இடம்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் கோஹ்லி 11ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான திலகரத்ன டில்ஷான் 303 இன்னிங்களில் 10,290 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஆனால், கோஹ்லி 210 இன்னிங்ஸ்களில் 10,381 ஓட்டங்களைப் பெற்று டில்ஷானை முந்தினார்.

சதமடித்தும் மோசமான சாதனையை நிலைநாட்டிய ரோஹித் சர்மா

அவுஸ்திரேலிய மண்ணில் நான்கு சதங்களை விளாசிய இந்திய அணியின்…

இதேவேளை, அவர் விரைவில் ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், குறித்த பட்டியலில் 10ஆவது இடத்தில் 10,405 ஓட்டங்களுடன் பிரைன் லாரா உள்ளார். எனினும், முதல் 10 இடங்களில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டமை இங்கு முக்கிய அம்சமாகும்.

2017ல் இருந்து அதிக ஒருநாள் சதம்

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து விராட் கோஹ்லி அதிக சதங்களை அடித்துள்ளார். ரோஹித் சர்மா 2017இல் இருந்து 42 இன்னிங்ஸில் 12 சதங்களை அடித்திருந்தார். ஆனால் கோஹ்லி 42 இன்னிங்ஸ்களில் 13 சதங்களை அடித்துள்ளார்.

அதேபோன்று, 2ஆவது விக்கெட் ஜோடியான கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 4,117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்துள்ளனர். முன்னதாக சச்சின், டிராவிட் இணைந்து 4117 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இவர்களை விட, குறைந்த இன்னிங்ஸில் கோஹ்லி, ரோஹித் இணை சாதனை படைத்தனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க