சர்வதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை ஓரம்கட்ட பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில், இதை முன்கூட்டியே அறிந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
இந்த நிலையில், உலகின் தலைநிறந்த வீரரான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் விராட் கோலி இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், விராட் கோலின் துடுப்பாட்ட போர்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் பிசிசிஐ விராட் கோலி முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோலியிடம் கேட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ரோஹித் சர்மா டெஸ்ட்டில் இருந்து விலகிய நிலையில், விராட் கோலியும் விலகினால் அது இந்திய அணியில் அனுபவ வீரர்களுக்கு பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஆகவே ஓய்வு முடிவை மாற்றும்படி பிசிசிஐ விராட் கோலியிடம் சொன்னதாக கூறப்படுகிறது.
- டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த ரோஹிட் சர்மா
- போர்ப்பதற்றம்: ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு
- இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் படுதோல்விக்குப் பிறகு பிசிசிஐ ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தது. இருவரும் கண்டிப்பாக உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவேளை துடுப்பாட்டத்தில் சொதப்பினால் பிசிசிஐ தன் மீது விமர்சனம் வைப்பதையோ, அழுத்தம் கொடுப்பதையோ விராட் கோலி விரும்பவில்லை. இதையறிந்தே ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
36 வயதான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 9230 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 254 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 30 சதங்களையும், 31 அரைச் சதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார். இதில் 1027 பௌண்டறிகளும், 30 சிக்சர்களும் அடங்கும்.
இதேவேளை, இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் சர்வதேச T20I கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். அதேபோல, தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<