ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு கோலி பரிந்துரை

205

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐசிசியினால் வழங்கப்படுகின்ற மாதாந்த சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்காக முதன்முறையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஒக்டோபர் மாத விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வியாழக்கிழமை (03) வெளியிட்டது.

இதில் அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்றன T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் (82 ஓட்டங்கள்), நெதர்லாந்துக்கு (62 ஓட்டங்கள்) எதிராக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் விராட் கோலி, சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் முதன் முறையாக இடம்பெற்றார்.

இது தவிர தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகிய இருவரினதும் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியாவிற்கு எதிராக கடந்த மாதம் குஹாத்தியில் நடைபெற்ற T20i போட்டியில் 47 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்த டேவிட் மில்லர், அதே இந்திய அணிக்கெதிராக பேர்த்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் 59 ஓட்டங்களை எடுத்து அசத்தியிருந்தார்.

அத்துடன், அண்மைக்காலமாக ஜிம்பாப்வே அணிக்காக சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சிக்கந்தர் ராசா, T20 உலகக் கிண்ண முதல் சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 87 ஓட்டங்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார். அதேபோல, ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையில் பிரகாசித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

அதேபேல, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் துடுப்பாட்டத்தில் எதிர்ப்பார்த்தளவு பிரகாசித்தத் தவறிய சிக்கந்தர் ராசா, பந்துவீச்சில் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, கடந்த மாதம் நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், தொடரின் ஆட்டநாயகி விருது வென்ற தீப்தி சர்மா மற்றும் பாகிஸ்தானின் நிடா டார் ஆகியோரது பெயர்கள் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் சர்வதேச வீரர்கள், ஊடக பிரதிநிதிகள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி விரைவில் அறிவிக்கும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<