T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய விராட் கோஹ்லி

ICC T20I Ranking

94

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் நடைபெற்று வருகின்றது. தொடரின் மூன்று போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது.

25 வருடங்களின் பின் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உலகக் கிண்ண பதக்கம்

அந்தவகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் பிரகாசிக்க தவறிய, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கடந்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

விராட் கோஹ்லி இரண்டாவது போட்டியில் 73 ஓட்டங்களையும், மூன்றாவது போட்டியில் 77 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார். அதேநேரம், மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்த இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 5 இடங்கள் முன்னேறி 19வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

அதுமாத்திரமின்றி இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில், ஜோஸ் பட்லருடன் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொண்ட, ஜொனி பெயார்ஸ்டோவ் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவர்களை தவிர்த்து ஷ்ரேயாஷ் ஐயர் 31வது இடத்தையும், ரிஷப் பண்ட் 80வது இடத்தையும் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பிடித்துக்கொண்டதுடன், சர்துல் தாகூர் 27வது இடத்தையும், புவனேஷ்வர் குமார் 45வது இடத்தையும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் பிடித்துக்கொண்டனர்.

அதேநேரம், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஷேய் ஹோப் 7வது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், நிக்கோலஸ் பூரன் 32வது இடத்தையும், எவின் லிவிஸ் 44வது இடத்தையும், டெரன் ப்ராவோ 99வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின்படி, T20I வீரர்கள் தரவரிசையில், துடுப்பாட்டத்தில் டேவிட் மலன், பந்துவீச்சில் ரஷீட் கான் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் மொஹமட் நபி ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<