இலங்கை பளுதூக்கல் அணியில் இடம்பிடித்தார் ஆர்ஷிகா

145

பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல்  சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் பங்குபற்றவுள்ள 20 பேர் கொண்ட இலங்கை அணிக்குழாத்தை இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன் பெண்கள் பிரிவில் வடக்கின் வடக்கின் நட்சத்திர பளுதூக்கல் வீராங்கனையான விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் பொலன்னறுவையில் நடைபெற்ற இலங்கை பளுதூக்கல் அணிக்கான வீரர்களைத் தெரிவுசெய்கின்ற போட்டியில் பங்குகொண்ட ஆர்ஷிகா, பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்னெச் மற்றும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறைகளில் தனது சொந்த தேசிய சாதனைகளை முறியடித்திருந்தார்.

இதன்காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களுக்கான இலங்கைக் குழாத்தில் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார்.

ஒரே போட்டியில் இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்த ஆஷிகா

ஏவ்வாறாயினும், இம்முறை பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில்  64 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஆர்ஷிகா போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016இல் மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர்ஷிகா, இறுதியாக கடந்த 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல்  சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களுக்காக இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினல் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் 8 எடைப் பிரிவுகளில் 10 வீரர்களும், 9 எடைப் பிரிவுகளில் 10 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் ஆகிய இரண்டு தொடர்களையும் ஒன்றாக நடத்த உலக மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளதுடன், இரண்டு போட்டிகளுக்கும் வௌ;வேறாக பதக்கங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த இரண்டு போட்டிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானின் டஸ்கென்ட் நகரில் நடைபெறவுள்ளது.

ஆண்கள் அணி:

திலங்க இசுரு குமார, சதுரங்க லக்மல் ஜயசூரியா, திலங்க விராஜ் பலகசிங்க, மனோஜ் மதுவந்த விஜேசிங்க, இந்திக்க சதுரங்க திசாநாயக்க, அன்டன் சுதேஷ், பீரிஸ், சிந்தன கீதால் விதானகே, ஷானக மதுஷங்க பீட்டர்ஸ், சமன் அபேவர்தன மற்றும் டபிள்யூ.பி. உஷான் சாருக்க

பெண்கள் அணி:

டி.எம். ஸ்ரீமாலி சமரகோன், தினூஷா ஹன்சனி கோமஸ், சமரி மெண்டிஸ் வர்ணகுலசூரிய, எம் உமைரா மொஹிடீன், ஆர.;எம்.என்.எஸ் ராஜபக்‌ஷ, விஜயபாஸ்கர் ஆர்ஷிகா,  ஜி.ஜி.டி.டி குருகாம, பி.டிஎன் சஞ்சனா வேதராச்சி, பி. சத்துரிகா பிரியந்தி மற்றும் டி.என்.பி.ஜே ஹபுதென்ன.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<