ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூ ஸ்டார்

594

FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் குழு B இற்கான ஆரம்பப் போட்டிகளில் ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0 என வெற்றி பெற்றுள்ளதுடன், மாத்தறை சிட்டி கழகம் மற்றும்  நியூ யங்ஸ் கால்பந்து கழக அணிகளுக்கு இடையிலான மோதல் 1 – 1 என சமநிலையடைந்துள்ளது. 

ரினௌன் வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க  

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் ரினௌன் வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். முதல் பாதியில் ரினௌன் வீரர்கள் தமக்கிடையான பந்துப் பரிமாற்றங்களை அதிகமாக மேற்கொண்டாலும் நியூ ஸ்டார் பின்களத்தை தாண்டி பந்தைக் கொண்டு செல்வதில் அவர்கள் தோல்வி கண்டனர். 

ரினௌன் வீரர் திலிப் பீரிஸ் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தின்போது மொஹமட் முஜீப் முதல் கோலைப் பெற்றாலும், அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 

முதல் பாதி: ரினௌன் வி.க 0 – 0 நியூ ஸ்டார் வி.க

இரண்டாம் பாதியிலும் நீண்ட நேரம் கோல் இன்றி போட்டி சென்றுகொண்டிருக்க, 72ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் அணிக்கு வெற்றி கோல் பெறப்பட்டது. 

நியூ ஸ்டார் திசையில் இருந்து உயர்த்தி செலுத்தப்பட்ட பந்தை ரினௌன் பின்கள வீரர் பிரன்சிஸ் தடுக்கத் தவற, பந்தைப் பெற்ற அனஸ் அதனை கோல் நோக்கி உதைந்தார். அதனை ரினௌன் கோல் காப்பாளர் ஹஸ்லான் தடுக்க, மீண்டும் தன்னிடம் வந்த பந்தை அனஸ் கோலுக்குள் செலுத்தினார். 

அதன் பின்னர் ரினௌன் வீரர்கள் தமது முதல் கோலுக்காக தொடர்ந்து முயற்சித்த போதும் நியூ ஸ்டார் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரர்கள் அதற்கான வாய்ப்புக்களை கொடுக்கவில்லை. 

Video – இலங்கையில் புதிய தொடர் ; புதிய அனுசரணையாளர் ! | FOOTBALL ULLAGAM

ஆட்டம் நிறைவில் பலம் கொண்ட ரினௌன் அணியை வீழ்த்திய நியூ ஸ்டார் வீரர்கள் வெற்றியுடன் குழு B யில் முதலிடத்தினைப் பிடித்துள்ளனர். 

முழு நேரம்: ரினௌன் வி.க 0 – 1 நியூ ஸ்டார் வி.க  

கோல் பெற்றவர்கள் 

  • நிவ் ஸ்டார் வி.க – மொஹமட் அனஸ் 72’ 

மாத்தறை சிட்டி கழகம் எதிர் நியூ யங்ஸ் கா.க

குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தமக்கான கோலை முதல் 10 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொண்டன. எனினும், எஞ்சிய முழு நேரமும் கோல்கள் இல்லாமல் ஆட்டம் சமநிலையடைந்தது. 

ஆட்டம் ஆரம்பித்த 6ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் திசைக்கு வெளியில் இருந்து செலுத்தப்பட்ட பந்தை, தனது பாதத்தின் பின் பகுதியால் கோலுக்குள் செலுத்தி நியூ யங்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார் ஒலாவலே.

FFSL தலைவர் கிண்ண மோதல்கள் எவ்வாறு உள்ளன?

ஆனால் அந்த முன்னிலை 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 9ஆவது நிமிடத்தில் வீரப்புலி எதிரணியின் கோலுக்கு சற்று வெளியில் இருந்து உயர்த்தி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார். 

அதன் பின்னர் போட்டி நிறைவு வரை இரண்டு அணி வீரர்களும் சிறந்த பந்துப் பரிமாற்றங்களுடன் தற்காப்பு ஆட்டத்தையும் ஆடி ஆட்டத்தை தலா ஒரு கோல்களுடனேயே நிறைவு செய்தனர்.  

முழு நேரம்: மாத்தறை சிட்டி கழகம் 1 – 1 நியூ யங்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள் 

  • மாத்தறை சிட்டி கழகம் –  B.வீரப்புலி 9’
  • நியூ யங்ஸ் கா.க – O. ஒலாவலே 6’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<