“கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்” – பொன்டிங்

90
Usman Khawaja
@AFP

அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்துக்குள் மீண்டும் உஸ்மான் கவாஜா நுழைவது கடினம் என அந்த அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் கருத்து வெளியிட்டுள்ளார். 

இடதுகை துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா  2019ம் ஆண்டு நடைபெற்ற ஏஷஷ் தொடருக்கு பின்னர் அணிக்குள் இடத்தை தவறவிட்டார். எனினும், அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் மீண்டும் இடத்தை தக்கவைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். 

>> இங்கிலாந்து தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தான் 

ஏஷஷ் தொடரின் போது, ஸ்டீவ் ஸ்மித்தின் தலையில் பந்து தாக்கியதில், அவருக்கு பதிலாக விளையாடிய மார்னஸ் லெபுச்செங் சிறப்பாக ஓட்டங்களை குவித்ததுடன், அணியில் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். பின்னர், ஸ்டீவ் ஸ்மித்தின் மீள்வருகை, கவாஜாவின் இடத்தை கேள்விக்குறியாக்கியது.

உஸ்மான் கவாஜா இறுதியாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னர் விளையாடியிருந்ததுடன், உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.  

அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அண்மையில் வெளியிட்டிருந்த வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான செபீல்ட் ஷீல்ட் தொடரில் 11 இன்னிங்ஸில் 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், ஓட்ட சராசரியும் 18.36 ஆக குறைந்திருந்த காரணத்தால் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், உஸ்மான் கவாஜாவின் மீள்வருகை குறித்து தனது கேள்வியை ரிக்கி பொன்டிங் வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “உண்மையில் உஸ்மான் கவாஜா மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கு கடினப்படுவார் என நினைக்கிறேன். அத்துடன், அவருக்காக நான் வருத்தமடைகிறேன்” என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார். 

“நான் உஸ்மான் கவாஜாவை விரும்புகிறேன். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் பழகியுள்ளேன். நான் தொடர்ச்சியாகவும் அவருடன் கலந்துரையாடிக்கொண்டிருப்பேன்.

அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பது எனக்கு எப்போதும் தெரியும். அவருடைய முழுத்திறமையை நாம் சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. ஒரு துளியை மாத்திரமே பார்த்திருக்கிறோம். ஆனால், தொடர்ந்தும் பிரகாசிக்க தவறிவருகின்றார். எனினும், உஸ்மான் கவாஜா அணிக்கு தேவையான வீரர் என நான் நினைக்கிறேன்” என ரிக்கி பொன்டிங் மேலும் சுட்டிக்காட்டினார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<