ஈரானின் ஆர்தபில் நகரில் இடம்பெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆடவர்களுக்கான ஆசிய சம்பியன்ஷிப் கரப்பந்தாட்டத் தொடரில் உஸ்பகிஸ்தான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தொடரின் 9ஆவது இடத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இலங்கை அணி அதிகரித்துக்கொண்டுள்ளது.

இலங்கையின் காலிறுதிக் கனவை தகர்த்தெறிந்த தாய்லாந்து

ஏற்கனவே இடம்பெற்ற முதல் போட்டியில் ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை வீரர்கள், தாய்லாந்து அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். எனினும், இலங்கை வீரர்கள் அவ்வணிக்கு கடும் போராட்டம் கொடுத்தும் இறுதியில் 3-1 என தொல்வியைத் தழுவினர். 

இந்நிலையில் உஸ்பகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 25-20 மற்றும் 25-16 என இலங்கை அணி இழந்தது. எனினும் பின்னர் எழுச்சி பெற்ற இலங்கை வீரர்கள் அடுத்த மூன்று செட்களையும் கடும் போராட்டத்துடன் ஆடி வெற்றி பெற்றது.

இதில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற மூன்றாவது செட்டின் இறுதியில் 26-24 என இலங்கை அணி வெற்றி பெற்றது. எனினும் அதற்கு அடுத்த செட்டான 4ஆவது செட் நிறைவை எட்டிய நிலையில் இரு அணிகளும் 25-25 என சமநிலையடைந்தது. எனினும் செட் நிறைவில் இலங்கை வீரர்கள் 28-26 என வெற்றி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து தீர்மானம் மிக்க இறுதி செட்டில் இலங்கை வீரர்கள் 16-14 என வெற்றி பெற்றனர். எனினும் இந்த செட்டும் இரு தரப்பினரதும் போராட்டத்திற்கு குறைவின்றி இடம்பெற்ற ஆட்டமானவே இருந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி, தமது இறுதி ஆட்டமாக அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை தரப்பு வெற்றி பெறும் பட்சத்தில் தொடரின் 9ஆவது இடத்தைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.