இலங்கை ஒருநாள் குழாமில் 3 மாற்றங்கள்

14264
Upul Tharanga, Dasun Shanaka, Niroshan Dickwella

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நடைபெற்று முடிவடைந்துள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும் 1 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி கொண்டுள்ளதோடு தொடரை அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

புதங்கிழமை(31) ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் கால் உபாதைக்கு உள்ளாகி வெளியானதோடு இது தொடர்பில் தினேஷ் சந்திமால் போட்டியின் பின் செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது “எஞ்சலோ மெதிவ்ஸின் உபாதை மிக மோசமான நிலையில் உள்ளதால் அநேகமாக அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறுவார்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான  கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான இலங்கை குழாமில் உபாதைக்குள்ளான இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் அத்தோடு சகலதுறை வீரர் திஸர பெரேரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மெதிவ்ஸ் விலகியதன் காரணமாக அணியின் தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ளது

இந்த மூவருக்கும் பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, சகலதுறை வீரர் தசுன் ஷானக மற்றும் இலங்கை “ஏ” அணியின் இங்கிலாந்து தொடரில் கலக்கிய நிரோஷான் திக்வெல்ல ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நாளை கண்டி பல்லேகலையில் உள்ள இலங்கை அணியுடன் இணைந்து 5ஆவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடதுகைத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க இலங்கை அணிக்காக 2005ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் அறிமுகமாகி தற்போது வரை 11 வருட கிரிக்கட் வாழ்க்கையில் 187 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 33.00 என்ற துடுப்பாட்ட சராசரியில் 5511 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகபட்ச ஓட்டம் 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் பெற்ற 174 ஓட்டங்களாகும். உபுல் தரங்வின் ஒருநாள் கிரிக்கட் வாழ்வில் அவர் 13 சதங்கள் மற்றும் 29 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

உபுல் தரங்க தான் இறுதியாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 32.00 என்ற துடுப்பாட்ட சராசரியில் 96 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அத்தொடரில் அவர் அதிகபட்ச ஓட்டங்களாக ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்று இருந்ததோடு 6 அல்லது 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இவ்வாறான ஓட்டங்களைப் பெற்று இருந்தது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டுகிறது.

6 அடி உயரமான தசுன் ஷானகவைப் பொறுத்த வரையில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21.20 என்ற துடுப்பாட்ட சராசரியில் 106 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு 18.50 என்ற பந்துவீச்சு சராசரியில் 6 விக்கட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இதேவேளை நிரோஷான் திக்வெல்ல 1 ஒருநாள் போட்டியில் விளையாடி 4 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை “ஏ” பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து “ஏ” அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரில் நிரோஷான்  திக்வெல்ல 4 போட்டிகளில் 41.00 என்ற துடுப்பாட்ட சராசரியில் 164 ஓட்டங்களை பெற்று இருந்தார். அதில் 2 அரைச்சதங்கள் அடங்குகின்றமை முக்கிய அம்சமாகும். அத்தோடு இந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130.15 ஆக காணப்படுகின்றமை கூற இன்னுமொரு முக்கிய அம்சமாகும்.

5ஆவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி 
தினேஷ் சந்திமால் (தலைவர்), உபுல் தரங்கா, தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, குசல்  மெண்டிஸ், எஞ்சலோ பெரேரா, குசல் ஜனித் பெரேரா, தசுன்  சானக, சீக்குகே  பிரசன்னா, சச்சித்  பத்திரண, டில்ருவான் பெரேரா, லஹிரு குமார, சுரங்க லக்மால், அமில அபோன்சோ
இந்த 3 பேரும் இலங்கை குழாமில் இணைந்தமை தொடர்பில் உங்களது கருத்துகளை கீழே கொமெண்ட் செய்யவும்