போல்டின் ஹெட்ரிக் சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியுஸிலாந்து

203

பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டியில் நியுஸிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

டி20 தொடரை 3-0 என இழந்த நியுஸிலாந்து அணிக்கு இது பாகிஸ்தான் அணியுடனான தொடரில் பெறப்பட்ட முதலாவது வெற்றியாகும். மேலும், ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக வீழ்த்திய 12ஆவது சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

  மற்றுமொரு டி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான்

நேற்று (07) இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கொலின் மன்றோவுடன் களமிறங்கிய ஜோர்ஜ் வோர்கர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கொலின் மன்றோ 29 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 27 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, நியுஸிலாந்து அணி 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ் டைய்லர் மற்றும் டொம் லதம் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர். இதன்போது அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 208 ஆக இருந்த வேளை நான்காவது விக்கெட்டுக்காக லதம் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அதே ஓட்ட எண்ணிக்கையில் தமது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மேலதிகமாக இரண்டு ஓட்டங்கள் பெற்று 80 ஓட்டங்களுடன் ரோஸ் டைய்லர் ஆட்டமிழக்க நியுஸிலாந்து அணி வெறும் 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் பின்வரிசை வீரர்களான டிம் சௌத்தி 20 ஓட்டங்களையும் இஷ் சோதி 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதன் விளைவாக அவ்வணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஏற்கனவே 3-0 என டி20 தொடரை கைப்பற்றியிருந்த உற்சாகத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 ஓட்டங்கள் பெற்றிருந்த போது போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய நியுஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களான ஃபகர் சமான், பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் சாதனை புரிந்த மூன்றாவது நியுஸிலாந்து பந்து வீச்சாளராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய இமாம் உல் ஹக் மற்றும் சுஹைப் மலிக் ஜோடி 63 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இமாம் 34 ஓட்டங்களுடனும் மலிக் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 85 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

ரோஹித் ஷர்மாவின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான…….

பின்னர் சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் மற்றும் இமாத் வஷீம் ஆகியோர் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்ட போதும் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கு முடியாமல் போனது. சர்ப்ராஸ் 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன் இமாத் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

சிறப்பாக பந்து வீசிய லுக்கி பேர்குசன் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். ட்ரெண்ட் போல்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

நாளை மறுதினம் (9) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி தொடரை சமப்படுத்துமா அல்லது நியுஸிலாந்து அணி தொடரை கைப்பற்றுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.  

போட்டியின் சுருக்கம்

நியுஸிலாந்து அணி 266/9 (50) – ரோஸ் டைய்லர் 80, டொம் லதம் 68, சதாப் கான் 38/4, ஷஹீன் அஃப்ரிடி 46/4

பாகிஸ்தான் அணி 219 (47.2) – சப்ராஸ் அஹமட் 64, இமாத் வஷீம் 50, லுக்கி பேர்குசன் 36/3, ட்ரெண்ட் போல்ட் 54/3, கிரன்ட்ஹோம் 40/2

முடிவு : நியுசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<