சுதந்திர கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது வட மாகாண அணி

715

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பட்டில் இடம்பெற்று முடிந்துள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் தென் மாகாணத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட வட மாகாண அணி தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது.

இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களாக (Two Legs) இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தை வட மாகாண அணியும், சபரகமுவ மாகாணத்தை தென் மாகாண அணியும் வீழ்த்தி இந்த இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

இந்நிலையில், வட மாகாண அணியின் சொந்த மைதானமான யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் சனிக்கிழமை (05) இடம்பெற்ற இந்தப் போட்டியின் 20 நிமிடங்கள் கடந்த நிலையில் வட மாகாணத்திற்கு எதிரணியின் எல்லையில் ஒரு புறத்தில் இருந்து கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை விங்னேஷ் கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலை பெற்றார்.

மீண்டும் முதல் பாதியின் இறுதி தருவாயில் கீதன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை பெற்ற கண்ணன் தேனுசன், அதனை எதிரணியின் கோல் எல்லையில் வைத்து பின்கள வீரர்களின் தடுப்பிற்கு மத்தியில் கம்பங்களுக்குள் செலுத்தினார். இதனால், வட மாகாண வீரர்கள் முதல் பாதி நிரைவடையும்போது இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றனர்.

மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி வட மாகாண அணியினர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் போட்டியின் மூன்றாவது கோலும் அவர்களுக்கு கிடைத்தது.

சிறந்த பந்து பரிமாற்றங்களின் நிறைவில் அணித்தலைவர் நிதர்சன் தென் மாகாண கோளுக்கு அருகில் இருந்து உதைந்த பந்து பின்கள வீரரின் காலில் பட்டு வர, மீண்டும் அவர் அதனை கோளுக்குள் செலுத்தினார்.

இந்த கோலுடன், சுதந்திர கிண்ண தொடரில் தனது ஏழாவது கோலை பதிவு செய்த நிதர்சன் தொடரில் அதிக கோல்களை பெற்ற வீரராக மாறினார்.

பின்னர், 80 நிமிடங்கள் கடந்த நிலையில் இரு அணி வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் நிறைவுடன் தென் மாகாண வீரர்கள் வேகமாக பெற்ற பிரீ கிக்கை வட மாகாண கோல்காப்பளர் அமல்ராஜ் சிறந்த முறையில் பிடிக்க தவறியமையினால் கோளுக்கு அருகில் இருந்த கேஷான் துமிந்து பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி தென் மாகாண அணிக்கான முதல் கோலை பெற்றார்.

மீதி நிமிடங்களில் எந்த கோலும் பெறப்படாமையினால் போட்டி நிறைவில் 3-1 என வெற்றி பெற்ற வட மாகாண அனியினர், மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரின் சம்பியன்களாக முடிசூடியது. தொடரின் இரண்டாம் இடத்தை தென் மாகாண அணி பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: வடக்கு 3 – 1 தெற்கு

கோல் பெற்றவர்கள்

வட மாகாணம் –  V. விக்னேஷ் 23’, கண்ணன் தேனுஷன் 45’, மரியதாஸ் நிதர்சன் 59’

தென் மாகாணம் – கேஷான் துமிந்து 85’  

தொடரின் விருதுகள்

தங்க பாதணி – மரியதாஸ் நிதர்சன் (வட மாகாணம்)

தங்க கையுறை – மொஹமட் முர்ஷீத் (கிழக்கு மாகாணம்)

தங்கப் பந்து – மரியதாஸ் நிதர்சன் (வட மாகாணம்)

வளரந்து வரும் வீரர் – மொஹமட் முன்ஷிப் (கிழக்கு மாகாணம்)

சிறந்த விளையாட்டு விழுமியங்ளைக் கொண்ட அணி – கிழக்கு மாகாணம்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<