புரிந்து கொள்ள முடியாத ஓஷத, அஞ்செலோ பெரேரா ஆகியோரின் நீக்கம்

1504

இலங்கைக்கு சுற்றுலா வரும் பங்களாதேஷ் அணியுடன், அடுத்த வெள்ளிக்கிழமை (26) இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றது. இந்நிலையில், சொந்த நாட்டில் இடம்பெறும் இந்த ஒருநாள் தொடருக்காக 22 பேர் கொண்ட இலங்கை வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டமை அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அத்தோடு, உலகக் கிண்ணத்திற்கான இலங்கையின் மேலதிக வீரர்கள் குழாத்தில் இடம்பெற்ற ஓஷத பெர்னாந்து மற்றும் அஞ்செலோ பெரேரா, பங்களாதேஷ் அணிக்கு எதிரான 22 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இடம்பிடிக்காதது மேலும் விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக………

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டிருந்த மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களான ஓஷத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா ஆகியோர் இரண்டு மாதங்கள் உலகக் கிண்ணம் நடைபெற்ற இங்கிலாந்தில் பயிற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருக்கவில்லை.

அதேநேரம், உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் ஏனைய மேலதிக வீரர்களாக இருந்த வனின்து ஹஸரங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் கசுன் ராஜித,  நுவன் பிரதீப்புக்கு ஏற்பட்ட உபாதையினால் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு உலகக் கிண்ணத்தில் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்ட கசுன் ராஜித, வனின்து ஹஸரங்க ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 22 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்க ஓஷத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா ஆகியோருக்கு பங்களாதேஷ் தொடரில் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்ற கேள்வி எழுகின்றது.

27 வயது நிரம்பிய திறமையான வலதுகை துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாந்து, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்க மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் அச்சமற்ற, அழுத்தங்களை கையாளும் தனது துடுப்பாட்டம் மூலம் அனைவரையும் ஈர்த்திருந்தார். 

இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய கிரிக்கெட் அணியில் முதற்தடவையாக வாய்ப்பை பெற்றுக் கொண்ட ஓஷத பெர்னாந்து, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா ஆகியோரை சிறந்த முறையில் எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ ……….

அத்தோடு ஓஷத பெர்னாந்து வேகப் பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள் என இருவகை பந்துவீச்சாளர்களையும் திறமையான முறையில் எதிர்கொள்ள கைதேர்ந்த துடுப்பாட்ட பாணிகளையும் தன்னிடத்தில் வைத்திருக்கின்றார். இதுமட்டுமல்லாது ஓஷத பெர்னாந்து தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் 131 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில் அவர், போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்றுக் கொண்ட 75 ஓட்டங்கள் இலங்கை அணி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை தென்னாபிரிக்க மண்ணில் பெற முக்கிய காரணமாக அமைந்திருந்தது. 

தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் 5 இன்னிங்சுகளில் விளையாடிய ஓஷத பெர்னாந்து 127 ஓட்டங்களை குவித்தார். ஓஷத பெர்னாந்து ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு பிரகாசிக்காமல் போனாலும், அவர் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும்வகையில் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறு இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு புத்துணர்ச்சியாக இருந்த ஓஷத பெர்னாந்து, உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் இடம்பெறாதது கேள்விக்குறியாக இருந்தது. சில வீரர்கள் தொடர்ச்சியாக ஜொலிக்க தவறிய போதும் அணியில் தொடர்ந்து வாய்ப்பினை பெறும் நிலையில், ஓஷத பெர்னாந்துவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பினை பெற கடுமையான பயிற்சிகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. உலகக் கிண்ணம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓஷத பெர்னாந்து நிலையான இடம் ஒன்றை பெறுவார் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

மறுமுனையில் தனது பாடசாலை காலத்தில் இருந்தே, துடுப்பாட்டத்தில் அசத்திய அஞ்செலோ பெரேரா, 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரவேசம் மேற்கொண்ட பின்னர் ஆறு வருடங்களில் 5 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருக்கின்றார். அஞ்செலோ பெரேராவிற்கு வழமையாக தேசிய அணியில்  நிலைத்திருக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாகும்.

தனது முதல் போட்டியில் 23 வயது துடுப்பாட்ட வீரராக தோல்வியடைந்த பெரேரா, அடுத்த போட்டியில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பெறவில்லை. பின்னர், 2014 ஆம் ஆண்டில் மீண்டும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடிய அஞ்செலோ பெரேரா குறித்த போட்டியிலும் துடுப்பாடியிருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் விளையாடிய அஞ்செலோ பெரேரா, அதனை அடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்கள் விளாசியதன் மூலம், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அஞ்செலோ பெரேரா, தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் மீண்டும் வாய்ப்பினை பெற்றார். ஆனால், அவர் குறித்த ஒருநாள் தொடரில் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதோடு, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறினார். உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியினை தெரிவு செய்ய நடாத்தப்பட்ட மாகாண தொடரில் இரண்டு தடவைகள் துடுப்பாடும் வாய்ப்பை பெற்ற அஞ்செலோ பெரேரா, அதில் ஒருதடவை 84 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திக்வெல்ல தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள……..

இப்படியான கடந்தகால விடயங்களை தள்ளிவைத்துவிட்டு பார்த்த போதிலும் உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட இந்த இரண்டு வீரர்களும் பங்களாதேஷுடனான ஒருநாள் தொடருக்கான 22 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்திலாவது குறைந்தது வாய்ப்பினை பெற்றிருக்க வேண்டுமே? 

அதேநேரம் இவர்கள் உலகக் கிண்ணத்திற்காக மேலதிக வீரர்களாக இருந்த காரணத்தினால், குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கை A அணி, இலங்கை வளர்ந்துவரும் அணி ஆகியவற்றின் இந்திய, தென்னாபிரிக்க சுற்றுப் பயணங்களில் தங்களது திறமையினை நிரூபிக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது. ஆக, இவர்கள் மேலதிக வீரர்களாக இருந்ததன் மூலம் அடைந்த பயன் என்ன? 

இந்த வீரர்கள் தெரிவுகள், ஓஷத பெர்னாந்து மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகிய இருவருக்கும் வருத்தத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது. இவர்கள் இருவரும் பங்களாதேஷ் அணி, இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடன் விளையாடப்போகும் பயிற்சிப் போட்டியில் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இப்போட்டியில் இரண்டு வீரர்களும் திறமையை நிரூபித்து பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இறுதி பதினொருவர் குழாத்தில் வாய்ப்பினை பெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்த இரண்டு வீரர்களும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏன் இடம்பெறவில்லை என்பதை அறிய ThePapare.com ஆனது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல்லை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. எனினும், அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

வீரர்கள் தெரிவு ஒருபுறமிருக்க, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஆறாவது இடத்தினை பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி,  பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்கின்றது.

அந்தவகையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 28 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில்  அடுத்த இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளது.

>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<