மேலதிக நேரத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதி மோதலில்

UEFA EURO 2020

248

யூரோ 2020 அரையிறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் அணித் தலைவர் Harry Kane பெற்ற கோலினால் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட இங்கிலாந்து தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  

இதற்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் உக்ரைன் அணியை 4-0 என இலகுவாக வீழ்த்தியும், டென்மார்க் வீரர்கள் செக் குடியரசு அணியை 2-1 என வீழ்த்தியும் அரையிறுதிக்குத் தெரிவாகியிருந்தனர். 

இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் யூரோ அரையிறுதியில்

இந்நிலையில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் இடையிலான முதல் அரையிறுதி இடம்பெற்ற இங்கிலாந்தின் வெம்ப்லி அரங்கிலேயே இந்த இரண்டாவது அரையிறுதியும் வியாழக்கிமை ஆரம்பமானது. 

ஆட்டம் 30 நிமிடங்களை அண்மித்த வேளையில் டென்மார்க் அணிக்கு இங்கிலாந்து எல்லையில் வைத்து அடுத்தடுத்து இரண்டு பிரீ கிக் வாய்ப்புக்கள் கிடைத்தன. இரண்டாவது வாய்ப்பின்போது டென்மார்க் அணியின் இளம் வீரர் Damsgaard தடுப்பு வீரர்களுக்கு மேலால் உதைந்த பந்து கோலாக மாற, டென்மார்க் வீரர்கள் போட்டியில் முன்னிலை பெற்றனர். 

அடுத்த 8 நிமிடங்களில் எதிரணியின் கோலுக்கு அண்மையில் வைத்து ரஹீம் ஸ்ரேலிங் கோலுக்கு உதைந்த பந்து டென்மார்க் கோல் காப்பாளர் Pickford இன் உடம்பில் பட்டு வந்தது. 

பெனால்டியில்‌ ‌ஸ்பெயினை‌ ‌வென்று‌ ‌இறுதிப்‌ ‌போட்டிக்கு‌ ‌சென்ற‌ ‌இத்தாலி‌

எனினும், அடுத்த ஒரு நிமிடம் கடப்பதற்குள் டென்மார்க் அணியின் திசைக்குள் பந்தை எடுத்துச் சென்ற இங்கிலாந்தின் 19 வயது நிரம்பிய சகா  உள்ளனுப்பிய பந்து டென்மார்க் அணித் தலைவர் Simon Kjær இன் கால்களில் பட்டு ஓன் கோலாக மாற போட்டி சமநிலையானது.  

முதல் பாதி: இங்கிலாந்து 1 – 1 டென்மார்க் 

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இங்கிலாந்து வீரர்கள் முதல் பாதியை விட அதிகமாக எதிரணியின் கோல் எல்லைக்கு பந்தை எடுத்துச் சென்றனர். அவர்கள் அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் டென்மார்க் பின்கள வீரர்களும் Pickford உம் அவற்றை சிறப்பாகத் தடுத்தனர். 

போட்டியின் இறுதித் தருவாயில் இங்கிலாந்து அணி கவுண்டர் அட்டக் முறையில் கோலுக்காக வாய்ப்புக்களை அதிகரிக்க, டென்மார்க் அணி அதிகமான வீரர்களை பின்களத்தில் வைத்து தடுப்பாட்டத்தை அதிகரித்தது. 

ஜேர்மனிய சிறுமிக்காக 22 000 பவுண்ட்களை திரட்டிய இங்கிலாந்தவர்கள்

இதனால் இரண்டாம் பாதியில் எந்தவித கோல்களும் பெறப்படாமையினால், போட்டியின் முழு நேர நிறைவில் தலா ஒரு கோலுடன் ஆட்டம் சமநிலையானது. 

முழு நேரம்: இங்கிலாந்து 1 – 1 டென்மார்க்

பின்னர் கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்திலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணியின் ரஹீம் ஸ்ட்ரேலிங் 103ஆவது நிமிடத்தில் எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்ட, இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இந்த முடிவு VAR முறையிலும் பரிசீலிக்கப்பட்ட பின்பு பெனால்டி உறுதி செய்யப்பட்டது. 

கிடைத்த பெனால்டியை அணித் தலைவர் Harry Kane பெற்றார். அவரது முதல் உதையை Pickford தடுத்தார். எனினும், மீண்டும் வேகமாக பந்தை Kane கோலுக்குள் செலுத்தி இங்கிலாந்து அணிக்கான வெற்றி கோலைப் பெற்றார். 

எனவே, மேலதிக நேர நிறைவில் Kane இன் கோலினால் 2-1 என வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, யூரோ 2020 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

1966ஆம் அண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர், முதல் முறை இறுதிப் போட்டியொன்றுக்கு தெரிவாகியுள்ள இங்கிலாந்து அணி எதிர்வரும் 12ஆம் திகதி இதே மைதானத்தில் இடம்பெறவுள்ள தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலி அணியை சந்திக்கவுள்ளது. 

மேலதிக நேர நிறைவில்: இங்கிலாந்து 2 – 1 டென்மார்க்

கோல் பெற்றவர்கள் 

  • இங்கிலாந்து – Simon Kjær 39′ (OG), Harry Kane 104′
  • டென்மார்க் – Mikkel Damsgaard 30′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<