பெனால்டியில்‌ ‌ஸ்பெயினை‌ ‌வென்று‌ ‌இறுதிப்‌ ‌போட்டிக்கு‌ ‌சென்ற‌ ‌இத்தாலி‌

UEFA EURO 2020

427
Italy vs Spain

இத்தாலி அணிக்கு எதிரான யூரோ 2020 அரையிறுதிப் போட்டியில் சிறந்த போராட்டத்தைக் கொண்டுத்த ஸ்பெயின் அணி, துரதிஷ்டவசமாக பெனால்டியில் தோல்வியடைய, இத்தாலி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 

இதற்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் இத்தாலி 2-1 என பெல்ஜியம் அணியையும், ஸ்பெயின் அணி 3-1 என பெனால்டியில் சுவிட்சர்லாந்து அணியையும் வீழ்த்தியிருந்தது. 

>> பெனால்டியில் வென்ற ஸ்பெயின், பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி அரையிறுதியில்

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு (08) லன்டண் வெம்ப்லி அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் ஸ்பெயின் அணியின் முன்னணி வீரர் மொராடா முதல் பதினொருவரில் களமிறக்கப்படவில்லை.  

போட்டியின் முதல் 15 நிமிடங்களில் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இத்தாலி வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் கோலுக்கான முதல் முயற்சியை எடுத்தாலும் அதன்போது அவ்வணி வீரர் ஓப் சைட் இருந்ததாக சைகை காண்பிக்கப்பட்டது.  

15 நிமிடங்களின் பின்னர் முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலத்திய ஸ்பெயின் வீரர்கள் கோலுக்கான 5 முயற்சிகளை மேற்கொண்டனர். இவை அனைத்தும் கோலாகாத நிலையில் முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவு பெற்றது. 

முதல் பாதி: இத்தாலி 0 – 0 ஸ்பெயின்

இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து இத்தாலி வீரர்கள் முதல் பாதி போன்றில்லாமல் தமது ஆட்டத்தில் வேகம் காண்பித்தனர். அதற்கு ஈடாகவே ஸ்பெயின் அணியும் தமது முதல் கோலுக்காகப் போராடினர். 

எனினும், போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மத்திய களத்தின் ஒரு திசையில் இருந்து வழங்கப்பட்ட பந்தின்மூலம் இத்தாலி வீரர் Immobile கோலுக்காக முதல் முயற்சியை எடுக்க முன் ஸ்பெயின் பின்கள வீரர்களால் பந்து தடுக்கப்பட்டது. எனினும் மீண்டும் பந்தைப் பெற்ற Chiesa பின்கள வீரர்கள் இருவருக்கு இடையே பந்தை எடுத்து கோல் நோக்கி வேகமாக செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்று இத்தாலி அணியை முன்னிலைப்படுத்தினார். 

முதல் கோல் பெறப்பட்டு 20 நிமிடங்களில், மாற்று வீரராக வந்த மொராட்டா மத்திய களத்தில் இருந்து பந்தை சக வீரர் Olmo விற்கு வழங்கிவிட்டு முன்னோக்கி சென்று மீண்டும் அவரிடமிருந்து பந்தைப் பெற்று கோலின் இடது பக்கத்தினால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். 

>> ஜேர்மனிய சிறுமிக்காக 22 000 பவுண்ட்களை திரட்டிய இங்கிலாந்தவர்கள்

எஞ்சிய நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாததால் போட்டியின் முழு நேரம் தலா ஒரு கோலுடன் சமநிலை பெற்றது. எனவே, வெற்றி கோலுக்கான வாய்ப்பாக மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 

இது ஸ்பெயின் அணி யூரோ 2020 நொக் அவுட் சுற்றில் மேலதிக நேரத்திற்கு போட்டியை கொண்டு சென்ற மூன்றாவது சந்தர்ப்பமாக அமைந்தது. 

முழு நேரம்: இத்தாலி 1 – 1 ஸ்பெயின் 

மேலதிக நேரத்தின் எட்டாவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்களுக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தினால் ஸ்பெயினுக்கு அடுத்தடுத்து கிடைத்த கோலுக்கான வாய்ப்புக்கள் இரண்டும் தடுக்கப்பட்டன. 

ஆட்டத்தின் 110ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் Berardi அடுத்த கோலைப் பெற்ற போது அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

பின்னர், மேலதிக நேரத்திலும் கோல்கள் பெறப்படாத நிலையில் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

அதன்போது, ஸ்பெயின் கோல் காப்பாளர் Unai Simón ஒரு உதையை தடுக்க இத்தாலி கோல் காப்பாளர் Gianluigi Donnarumma இரண்டு உதைகளை தடுத்தார். எனவே, பெனால்டி நிறைவில் இத்தாலி 4-2 என வெற்றி பெற்று யூரோ 2020 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 

மேலதிக நேர நிறைவில்: இத்தாலி 1 – 1 ஸ்பெயின்

பெனால்டி முடிவு: இத்தாலி 4 – 2 ஸ்பெயின்

கோல் பெற்றவர்கள் 

  • இத்தாலி – Federico Chiesa 60′  
  • ஸ்பெயின் – Álvaro Morata 80′ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<