இலங்கைக்கு எதிரான ஒருநாள், T20I குழாத்தை அறிவித்த மே.தீவுகள்

Sri Lanka tour of West Indies 2021

1864

இலங்கை அணிக்கு எதிரான T20I  தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில், அதிரடி துடுப்பாட்ட வீரர் க்ரிஸ் கெயில் மற்றும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் பிடெல் எட்வர்டஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் T20I குழாம்களை இன்று (27) அறிவித்துள்ளது.

>> இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள உபுல் தரங்க

க்ரிஸ் கெயில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் விளையாடியதற்கு பின்னர், தேசிய அணியில் இணைக்கப்படவில்லை. இந்தநிலையில் கெயில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் முதன்முறையாக குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், பிடெல் எட்வர்ட்ஸ் சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிடெல் எட்வர்ட்ஸ் இறுதியாக 2012ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்ததுடன், இவரது இறுதி T20I போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 2012ம் ஆண்டு விளையாடியிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக க்ரிஸ் கெயில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்த நிலையில், நாடு திரும்பியிருந்தார்.

இவர்களுடன் புதுமுக வீரரான கெவின் சின்கிலையர் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகியிருந்த அகீல் ஹுசைன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இடம்பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறை வீரர் அன்ரே ரசல் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமாகிவரும் நிலையில், அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இடத்தை தக்கவைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக கீரன் பொல்லார்ட் செயற்படவுள்ளதுடன், நிக்கோலஸ் பூரன், எவின் லிவிஸ் மற்றும் பெபியன் எலன் ஆகியோர் ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இடம்பிடித்துள்ளனர்.

அதேநேரம், டுவைன் ப்ராவோ இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், ஷிம்ரன் ஹெட்மையர், ஒசானே தோமஸ், ஷெல்டன் கொட்ரல் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால், குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே.தீவுகள் T20I குழாம்

கீரன் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், பெபியன் எலன், டுவைன் ப்ராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், அன்ரே ப்ளெச்சர், க்ரிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், எவின் லிவிஸ், ஒபெட் மெக்கோய், ரோவ்மன் பவல், லெண்ட்ல் சிம்மொன்ஸ், கெவின் சின்கிலையர்

மே.தீவுகள் ஒருநாள் குழாம்

கீரன் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், பெபியன் எலன், ஷேய் ஹோப், டெரன் ப்ராவோ, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஷாரி ஜோசப், எவின் லிவிஸ், கெயல் மேயர்ஸ், ஜேசன் மொஹமட், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ செய்பெர்ட், கெவின் ஷின்கிலையர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<