லிதுர்ஷன், பிரணவனின் ஓட்டக்குவிப்புடன் கொக்குவில் இந்துவை வீழ்த்திய ஸ்கந்தவரோதயா!

U19 Schools Cricket Tournament 2022/23

74

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக ஸ்கந்தவரோதயா கல்லூரி வெற்றியை பதிவுசெய்ததுடன், மற்றுமொரு போட்டியில் நுகேகொடை சென். ஜோன்ஸ் கல்லூரியை எதிர்த்தாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி 4 விக்கெட்டுகளால் தோல்வியை தழுவியது.

சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அபார வெற்றி ; போராடி வென்றது அஸ்ஹர்!

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எதிர் நுகேகொடை சென். ஜோன்ஸ் கல்லூரி

தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மைதானத்தில் நடைபெற்ற பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், நுகேகொடை சென். ஜோன்ஸ் கல்லூரி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்துக் கல்லூரிக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்துக் கல்லூரி அணிக்கு விக்கெட் காப்பாளர் ஆர்.டிலுக்ஷன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ நிதுஷான் ஆகியோர் மாத்திரம் ஓரளவு ஓட்டங்களை குவிக்க, ஏனைய வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க தவறினர்.

டிலுக்ஷன் 49 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் அரைச்சதத்தை தவறவிட, ஸ்ரீ நிதுஷான் 28 ஓட்டங்களையும், என்.நிரூபன் 19 ஓட்டங்களையும் பெற, இந்துக் கல்லூரி அணியானது 37.4 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில், சத்மிக டெவ்மித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஜயந்தன் அபினாஷ், கேஷார நிமேஷ் மற்றும் அனுசார பெர்னாண்டோ ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புகளின் உதவியுடன் 26.4 ஓவர்கள் நிறைவில் 134/6 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

ஜயந்தன் அபினாஷ் 36 ஓட்டங்களையும், கேஷார நிமேஷ் 31 ஓட்டங்களையும், அனுசார பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் ஹர்ஷ முதுமின 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி – 131/10 (37.4), ஆர். டிலக்ஷன் 49, ஸ்ரீ நிதுஷான் 28, , சத்மிக டெவ்மித் 17/3

நுகேகொடை சென். ஜோன்ஸ் கல்லூரி -134/6 (26.4), ஜயந்தன் அபினாஷ் 36, கேஷார நிமேஷ் 31, அனுசார பெர்னாண்டோ 21, ஹர்ஷ முதுமின 18/2

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கொக்குவில் இந்துக் கல்லூரி எதிர் ஸ்கந்தவரோதயா கல்லூரி

கொக்குவில் இந்துக் கல்லூரி – ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தங்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்துக் கல்லூரிக்கு அணித்தலைவர் பி.கீதப்பிரியன் 30 ஓட்டங்களையும், கே. டிலோத் 28 ஓட்டங்களையும் பெற்று சராசரியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து எம்.கபிசன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதன்காரணமாக இந்துக் கல்லூரி அணியானது 41.1 ஓவர்கள் நிறைவில் தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் 163 ஓட்டங்களுக்கு இழந்தது. பந்துவீச்சில் எல்.கஜனன் 4 விக்கெட்டுகளையும், எஸ். துபிஷ்னன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி, கே.லிதுர்ஷன், எம்.பிரணவன் மற்றும் கே.சீரலன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் 34.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கே.லிதுர்ஷன் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், கே.சீரலன் 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, எம்.பிரணவன் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் எம்.கபிசன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கொக்குவில் இந்துக் கல்லூரி – 163/10 (41.1), பி.கீதப்பிரியன் 30, கே.டிலோத் 28, எம்.கபிசன் 27, எல்.கஜனன் 26/4, துபிஷ்னன் 32/3

ஸ்கந்தவரோதயா கல்லூரி – 164/10 (34.4), கே.லிதுர்ஷன் 44, எம்.பிரணவன் 43, கே.சீரலன் 28, எம்.கபிசன் 48/2

முடிவு – ஸ்கந்தவரோதயா கல்லூரி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<