முதல் இன்னிங்ஸ் வெற்றியினை தம்வசமாக்கிய அலோசியஸ் கல்லூரி அணி

338
U19 Schools Cricket

இன்று நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில் தர்மசோக கல்லூரிக்கு எதிராக அலோசியஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியினை பெற்றுக்கொண்டுள்ளது. இன்று ஆரம்பமாகியிருக்கும் மற்றைய போட்டிகளில் ஒன்றில் புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி வலுவான நிலையில் உள்ளது.

காலி அலோசியஸ் கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி

இப்போட்டியில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்சினை 4 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களுடன் தொடர்ந்த அம்பலங்கொடை தர்மசோக கல்லூரி அணியினர், தினுக்க தில்ஷான் ஆட்டமிழக்காமல் விளாசிய 89 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். கவிஷ விலோச்சன பந்து வீச்சில் 4 விக்கெட்டுக்களை அலோசியஸ் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, களமிறங்கிய அலோசியஸ் கல்லூரி அணி, 165 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து இரண்டாவது இன்னிங்சினை நிறைவு செய்துகொண்டது. இதில் ரவிந்து சஞ்சன அலோசியஸ் கல்லூரிக்காக 53 ஓட்டங்களை பதிவு செய்திருந்த இவ்வேளையில், தர்மசோக கல்லூரிக்காக லசித் குமார, உஷான் இமான்த, நிமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸில் 177 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை பெறுவதற்காக களமிறங்கி  தர்மசோக கல்லூரி அணி அதிரடியாக ஆடி, 18 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, இன்றைய போட்டியின் ஆட்டநேரம் நிறைவுற, இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

தர்மசோக கல்லூரிக்காக ரவிந்து ரஷந்த 40 ஓட்டங்களை இரண்டாவது இன்னிங்சில் பெற்றார். ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்த எதிரணி வீரர் ரவிந்து சஞ்சன தர்மசோகவின் 3 விக்கெட்டுக்களை பறித்திருந்தார்.

முன்னதாக, தமது முதல் இன்னிங்சில் ஆடியிருந்த  காலி அலோசியஸ் கல்லூரி அணி 213 ஓட்டங்களினை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 213 (64.2), நவிந்து நிர்மல் 89*, பசிந்து நாணயக்கார 44, லோஹன் டி சொய்ஸா 3/32, லசித் குமார 2/21

தர்மசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 202 (66.1), தினுக்க தில்ஷான் 89*, ஹர்ஷஜித் ரோசன் 62, கவீஷ விலோச்சன 4/55, நிதுக்க மல்ஷித் 2/23

புனித அலோசியஸ் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 165 (46.3), ரவிந்து சஞ்சன  53, லசித் குமார 3/31, உஷான் இமான்த 3/34, நிமேஷ் மெண்டிஸ் 3/46

தர்மசோக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 146/6 (18), ரவிந்து ரசந்த 40, ரவிந்து சஞ்சன  3/57

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித அலோசியஸ் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


மொரட்டுவ வித்தியாலயம் எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

மொரட்டுவ வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமான குழு C இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த சில்வெஸ்டர் கல்லூரி அணியின் தலைவர் முதலில் மொரட்டுவ வித்தியாலயத்தினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி களமிறங்கிய அவ்வணி, எதிரணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. இருப்பினும், அவ்வணிக்காக துலக்ஷ பீரிஸ் மாத்திரம்  ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களினை பெற்றார். இவரின் இந்த ஓட்டங்களுடன் மொரட்டுவ வித்தியாலயம் 88 ஓட்டங்களை மாத்திரம் முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில், எதிரணிக்கு சவால் கொடுத்த துஷித் டி சில்வா 4 விக்கெட்டுக்களையும், கனிஷ்க ஜயசேகர 3 விக்கெட்டுக்களையும் சில்வெஸ்டர் அணிக்காக கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், துடுப்பெடுத்தாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி, கவிந்து பெரேரா பெற்றுக்கொண்ட 45 ஓட்டங்களின் துணையுடன் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது, நான்கு விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

முதல் இன்னிங்ஸ்

மொரட்டுவ கல்லூரி: 88 (35.5), துலக்ஷ பீரிஸ் 24*, துஷித் டி சொய்ஸா 4/25, கனிஷ்க ஜயசேகர 3/21

புனித சில்வெஸ்டர் கல்லூரி: 133/4 (57), கவிந்து பெரேரா 45, சஷிக ரேமொண்ட்  42,  செஹாத ஷொய்ஸா 3/20

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


மஹிந்த கல்லூரி எதிர் குருநாகல் மலியதேவ கல்லூரி

இன்று மலியதேவ மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த மலியதேவ கல்லூரியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மஹிந்த கல்லூரிக்கு வழங்கினார்.

இதன்படி முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி, மலியதேவ பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியமால் தடுமாறி, 82 ஓட்டங்களிற்கு தனது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து சுருண்டு கொண்டது. பந்து வீச்சில் மிரட்டியிருந்த எதிரணியின் தினன்ஜய பிரேமரத்ன, கவீன் பண்டார, மனேல்க தர்மதாச ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய மலியதேவ அணியும் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்துகொண்டது. அவ்வணியின் அனைத்து வீர்ரகளும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டியிருந்த நிலையில், மஹிந்த கல்லூரியின் கவிந்து எதிரிவீர நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினையும் இன்றைய நாளிலேயே ஆரம்பித்த மஹிந்த கல்லூரியினர் இன்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது, ஒரு விக்கெட்டினை இழந்து 24 ஓட்டங்களினை பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 82 (41.2), மனேல்க தர்மதாச 3/10, தினஞ்சய பிரேமரத்ன 3/26, கவீன் பண்டார 3/11

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 88 (33.1), கவிந்து எதிரிவீர 4/22, கெவின் கொத்திகொட 3/07

மஹிந்த கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 24/1 (15)

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்