புனித பேதுரு கல்லூரி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றி

429
U19 Schools Roundup Report

இன்று நிறைவுற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை தோற்கடித்த புனித பேதுரு கல்லூரி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டதுடன், ரோயல் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகள் முதல் இன்னிங்சில் வெற்றியை சுவீகரித்தன.

புனித பேதுரு கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 197 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது. எனினும், சிறப்பாக பந்து வீசிய பேதுரு கல்லூரியின் மொஹமட் அமீன் 5 விக்கெட்டுகள் வீழ்த்த, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 166 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில், லசித் குரூஸ்புள்ளே அதிகபட்சமாக 43 ஓட்டங்களைக் குவித்தார். அதன்படி 124 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட புனித பேதுரு கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக லசித் குரூஸ்புள்ளே 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதன்படி, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 44.4 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கே சுருண்டது.

மீண்டும் பந்து வீச்சில் அசத்திய மொஹமட் அமீன் 4 விக்கெட்டுகளையும் சதுர ஒபேசேகர 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர். 28 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அதிரடியாக ஆடிய அனிஷ்க பெரேரா 100 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஷலீத் பெர்னாண்டோ (77) மற்றும் லக்ஷிண ரொட்ரிகோ (68*) அரைச் சதம் கடந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 290/5d (62) – அனிஷ்க பெரேரா 100, ஷலீத் பெர்னாண்டோ 77, லக்ஷிண ரொட்ரிகோ 68*, சச்சிந்து கொலம்பகே 2/22

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 166 (62) – லசித் குரூஸ்புள்ளே 43, ரவிந்து பெர்னாண்டோ 36, ஹஷான் பெர்னாண்டோ 32, மொஹமட் அமீன் 5/35

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 151 (44.4) – லசித் குரூஸ்புள்ளே 44, சச்சிந்து கொலம்பகே 33, மொஹமட் அமீன் 4/39, சதுர ஒபேசேகர 3/72

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 29/0 (4.2)

முடிவு: புனித பேதுரு கல்லூரி 10 விக்கெட்டுகளினால் வெற்றி


புனித ஜோசப் கல்லூரி எதிர் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி

முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற மேலும் 218 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்திய ருச்சிர ஏக்கநாயக்க 5 விக்கெட்டுகள் சாய்க்க, 126 ஓட்டங்களுக்கே டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி சுருண்டது. தசுன் தெமாஷ அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார்.

160 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட புனித ஜோசப் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தசுன் தெமாஷ ஆட்டமிழக்காது 114 ஓட்டங்கள் குவிக்க, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியினர் 7 விக்கெட்டுகளை இழந்து 335 ஓட்டங்களைக் குவித்தனர். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய சஷிக லஹிரு 64 ஓட்டங்களையும் ஷெஷாத் அமந்த 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

புனித ஜோசப் கல்லூரி சார்பாக ஹரீன் குரே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஆட்டம் நிறைவுக்கு வந்ததுடன், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித ஜோசப் கல்லூரி சார்பில் ஜெஹான் பெர்னாண்டோ புள்ளே 86 ஓட்டங்களையும், பஹன் பெரேரா 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் விஹான் குணசேகர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 286 (71.4) – ஜெஹான் பெர்னாண்டோ புள்ளே 86, பஹன் பெரேரா 63, விஹான் குணசேகர 5/60, முதித லக்ஷன் 3/84

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126 (38.3) – தசுன் தெமாஷ 39, ருச்சிர ஏக்கநாயக்க 5/30, ஹரீன் குரே 2/47

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 335/7 (82) – தசுன் தெமாஷ 114*, சஷிக லஹிரு 64, ஷெஷாத் அமந்த 46, ஹரீன் குரே 4/80

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


ரோயல் கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி

முதல் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த மஹிந்த கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதாயின் மேலும் 108 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

அற்புதமாக பந்து வீசிய கோதம விஸ்வஜித் 5 விக்கெட்டுகள் வீழ்த்த, மஹிந்த கல்லூரி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனித்து போராடிய ரவிந்து ஹன்சிக 87 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய ரோயல் கல்லூரி எதிரணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பிரகீத் மலிந்த, ரவிந்து ஹன்சிக மற்றும் கவிந்து எதிரிவீர தலா 3 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொள்ள, ரோயல் கல்லூரியானது 9 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

வெறும் 2 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய மஹிந்த கல்லூரி விக்கெட் இழப்பேதுமின்றி 7 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கனித் சந்தீப (52) அரைச்சதம் பெற்றார். கவிந்து சதுரங்க 40 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் ரிஷான் காவிந்த 4 விக்கெட்டுகளையும், கவிந்து எதிரிவீர 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 205 (58.4) – கனித் சந்தீப 52, கவிந்து சதுரங்க 40, ஹிமேஷ ராமநாயக்க 37, ரிஷான் காவிந்த 4/37, கவிந்து எதிரிவீர 3/64

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 154 (45.4) – ரவிந்து ஹன்சிக 87, கோதம விஸ்வஜித் 5/47

ரோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 101/9d (35.4) – பிரகீத் மலிந்த 3/14, ரவிந்து ஹன்சிக 3/31, கவிந்து எதிரிவீர 3/37

மஹிந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 7/0 (2)

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ரோயல் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.