சகல துறையிலும் அசத்தினார் நிபுன் : புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

204
U19 Schools Roundup - 01st of Nov

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் புனித ஜோசப் வாஸ் கல்லூரியுடனான போட்டியில், புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

அதேவேளை இன்று ஆரம்பமான போட்டிகளில் லும்பினி கல்லூரி, புனித அலோசியஸ் கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிகள் வலுவான நிலையில் உள்ளன.

புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

19 வயதிற்கு உட்பட்டோருக்கானசிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித ஜோசப் கல்லூரியும், புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின்போது, 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்றிருந்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 279 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

முன்னர் துடுப்பாட்டத்தில் அசத்திய நிபுன் சுமனசிங்க பந்து வீச்சிலும் தனது கைவரிசையை காட்டி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி புனித ஜோசப் வாஸ் கல்லூரி 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தனஞ்சய பெரேரா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை குவித்தார். ஜெஹான் டேனியல் 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

144 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட புனித ஜோசப் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி ஆடுகளம் பிரவேசித்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மதுஷான் ரணதுங்க 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், தனஞ்சய பெரேரா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

முன்னர், நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய அவ்வணியின் நிபுன் சுமனசிங்க 189 பந்துகளில் 12 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 122 ஓட்டங்களை விளாச, புனித ஜோசப் கல்லூரி 8 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

நிபுன் சுமனசிங்கவிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய ஜெஹான் டேனியல் 63 ஓட்டங்கள் குவித்ததுடன் பந்து வீச்சில் மதுஷான் ரணதுங்க மற்றும் தனஞ்சய பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 303/8d (77.2)நிபுன் சுமனசிங்க 122, ஜெஹான் டேனியல் 63, திணித் ஜெயக்கொடி 46, மதுஷான் ரணதுங்க 2/54, தனஞ்சய பெரேரா 2/79

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 159 (66.5)தனஞ்சய பெரேரா 35, நிபுன் சுமனசிங்க 5/35, ஜெஹான் டேனியல் 3/55

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 216/4 (45)மதுஷான் ரணதுங்க 95, தனஞ்சய பெரேரா 40*

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


ரோயல் கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

இன்று ஆரம்பமான குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் ரோயல் கல்லூரியை எதிர்த்து லும்பினி கல்லூரி விளையாடியது. கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய லும்பினி கல்லூரி 61.1 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தனுக தாபரே 81 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மேலும், கவின் பீரிஸ் 45 ஓட்டங்களையும், ரவீஷ சத்சர 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் கனித் சந்தீப மற்றும் கோதம ரணசிங்க 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ரோயல் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றிருந்தது. லும்பினி கல்லூரி சார்பாக சஷேன் ரவிந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி – 260 (61.1)தனுக தாபரே 81, கவின் பீரிஸ் 45, ரவீஷ சத்சர 42, கனித் சந்தீப 3/51, கோதம ரணசிங்க 3/81

ரோயல் கல்லூரி – 67/3 (23) – சஷேன் ரவிந்து 2/18

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

இத்தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் புனித சில்வெஸ்டர் கல்லூரியை எதிர்த்து புனித அலோசியஸ் கல்லூரி போட்டியிட்டது. காலி சர்வேதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித அலோசியஸ் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி அற்புதமாக பந்து வீசிய ஹரீன் புத்தில 14 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புனித சில்வெஸ்டர் கல்லூரி 80 ஓட்டங்களுக்கே சுருண்டது. துடுப்பாட்டத்தில் சஷிக ரேமன் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை குவித்தார். ஹரீன் புத்திலவுக்கு அடுத்த படியாக நிதுக மல்சித் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி, இன்றைய தினத்திற்காக போட்டி நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரவிந்து சஞ்சன 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் துசித டி சொய்சா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி – 80 (45.3)சஷிக ரேமன் 36, ஹரீன் புத்தில 6/14, நிதுக மல்சித் 3/25

புனித அலோசியஸ் கல்லூரி – 135/3 (47) – ரவிந்து சஞ்சன 54, துசித டி சொய்சா 2/32

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

இத் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் புனித செபஸ்டியன் கல்லூரியும் நாலந்த கல்லூரியும் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நாலந்த கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய மிஷென் சில்வா 121 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோ 67 ஓட்டங்களையும் விளாச, புனித செபஸ்டியன் கல்லூரி தமது முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக உமேஷ்க டில்ஷான் 4 விக்கெட்டுக்களையும் கலன பெரேரா 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஆட்டம் நிறைவடைய சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய நாலந்த கல்லூரி, விக்கெட் இழப்பேதுமின்றி 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 327 (72.2) – மிஷென் சில்வா 121, நுவனிது பெர்னாண்டோ 67, உமேஷ்க டில்ஷான் 4/62, கலன பெரேரா 3/73

நாலந்த கல்லூரி – 33/0 (10.1)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித சேர்வேஷஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

இன்று ஆரம்பமான குழு ‘D’ இற்கான மற்றுமொரு போட்டியில் இவ்விரு கல்லூரி அணிகளும் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி 62.1 ஓவர்களில் 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முதித ஹஷான் மற்றும் சந்தரு நெத்மின முறையே 71 மற்றும் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் சச்சிந்து கொலம்பகே 4 விக்கெட்டுக்களையும் ரவிந்து பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களை பெற்றிருந்தது. லசித் குரூஸ்புள்ளே ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி – 214 (62.1) – முதித ஹஷான் 71, சந்தரு நெத்மின 58, சச்சிந்து கொலம்பகே 4/30, ரவிந்து பெர்னாண்டோ 3/42

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 91/2 (26)லசித் குரூஸ்புள்ளே 54*

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.