அவுஸ்திரேலிய கால்பந்து கழகத்துடன் இணையும் உசைன் போல்ட்

222
 

உலக மெய்வல்லுனர் அரங்கில் மகத்தான வீரராக சாதனைகள் பல படைத்த ஜமைக்காவின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், அவுஸ்திரேலிய கால்பந்து கழக அணிக்காக விளையாட உள்ளார்.

31 வயதான போல்ட், மெய்வல்லுனர் அரங்கில் 100 மீற்றர், 200 மீற்றர், 4X100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனாக முத்திரை பதித்தவர். தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய போல்ட், சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் கால்பந்து விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

தொழில்முறை கால்பந்து விளையாட்டுக்கு தயாராகும் உசைன் போல்ட்

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும்..

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் கழக அணிக்காக டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, குறித்த கால்பந்து கழகத்துடன் இணைந்து கொண்டுள்ள போல்ட், ஆறு வார பயிற்சி முகாமிலும் பங்கேற்க உள்ளதாகவும், அதன்பிறகு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவின் டிவிஷன் கால்பந்து போட்டிகளில் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதை உறுதி செய்துள்ள போல்ட்டின் முகாமையாளரான டோனி ராலிஸ், போல்ட்டுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் குறித்து தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அவுஸ்திரேலியாவின் சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஷோன் மிலேகெம்ப் கருத்து வெளியிடுகையில், ”போல்ட் எங்கள் அணியில் இணைவதற்கான சம்மதத்தை தெரிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவில்லை. அனைத்தும் நன்றாக நடந்தால், இந்த பருவத்தில் டிவிஷன் லீக் போட்டிகளில் அவருக்கு விளையாட முடியும்” எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ள உசைன் போல்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் நடைபெறவிருக்கும்….

இதுஇவ்வாறிருக்க, அண்மைக்காலமாக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த போல்ட், ஜேர்மனியின் போருசியா டொடர்மண்ட், நோர்வேயின் ஸ்டிராம்கொட்செட் மற்றும் தென்னாபிரிக்காவின் சன்டவுன் ஆகிய கால்பந்து கழகங்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எட்டு தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும் உசைன் போல்ட் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், மீண்டும் ஒரு முறை போட்டித் தன்மை மிக்க தொழில்முறை கால்பந்து விளையாட்டில் களமிறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.    

அதிலும் குறிப்பாக, கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரராக மாறுவதற்கான நடவடிக்கைகளை அவர் படிப்படியாக முன்னெடுத்து வருவதாக போல்ட் அண்மைக்காலமாக தெரிவித்து வந்தார்.

இதேவேளை, மென்செஸ்டர் யுனைடெட் அணியின் மிகப் பெரிய ரசிகனான போல்ட், தான் அந்த அணியுடன் இணைந்துகொண்டதாக வெளியான செய்தியை பல தடவைகள் மறுத்திருந்தார். ஆனாலும், எதிர்காலத்தில் அவ்வணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் சூசகமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில்,கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி யுனிசெப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சொக்கர் எயிட் எனப்படும் கால்பந்தாட்ட தொடரில் உசைன் போல்ட் பங்கேற்றிருந்தமை நினைவுகூறத் தக்கது.  

  • யுனிசெப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் போல்ட் பங்கேற்ற போது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<