சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி

314

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)   பாடசாலைகளுக்கு இடையிலான “சிங்கர் கிண்ண” ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி காலி மஹிந்த கல்லூரி அணியினை 11 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய

காலி சர்வதேச மைதானத்தில் (4) இடம்பெற்ற இந்த தீர்க்கமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதி ஆட்டங்களில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியினை வீழ்த்தி மஹிந்த கல்லூரியும், கொழும்பு றோயல் கல்லூரியினை வீழ்த்தி புனித ஜோசப் கல்லூரியும் இந்த போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றன.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹிந்த கல்லூரியின் தலைவர் நவோட் பரணவிதான முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை புனித ஜோசப் கல்லூரி வீரர்களுக்கு வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி அணி 48 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 177 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

புனித ஜோசப் கல்லூரியின் துடுபாட்டம் சார்பாக மிரங்க விக்ரமசிங்க 7 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார். இதேநேரம், காலி மஹிந்த கல்லூரியின் பந்துவீச்சுக்காக குஷான் மதுச மற்றும் சுபானு ராஜபக்ஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய மஹிந்த கல்லூரிக்கு ஆரம்ப வீரராக வந்த அணியின் தலைவர் நவோத் பரணவிதான அதிரடி துவக்கம் ஒன்றை வழங்கினார். அதிராடி ஆட்டத்தை தொடர முயற்சித்த பரணவிதான 21 பந்துகளை எதிர்கொண்டு 7 பெளன்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் ஜோசப் கல்லூரியின் லக்ஷான் கமகேயுடைய பந்துவீச்சுக்கு விக்கெட்டாக மாறினார்.

பின்னர், காலி மஹிந்த கல்லூரி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க தொடங்கியது. இதனால் அவ்வணி ஒரு கட்டத்தில் சரிவு நிலையை அடைந்த போதிலும் 10ஆம் இலக்கத்தில் வந்து பின்வரிசையில்  துடுப்பாடிய ஒசிந்து கவிந்தய அதிரடியாகப் பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. எனினும் துரதிஷ்டவசமான ரன் அவுட் ஒன்றின் மூலம் கவிந்தயவின் விக்கெட்டும் பறிபோக கடைசியில் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களுடன் காலி மஹிந்த கல்லூரி போட்டியில் தோல்வியடைந்தது.

மஹிந்த கல்லூரியில் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஒசிந்து கவிந்தய 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை குவித்திருந்தார்.

புனித ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக லக்ஷான் கமகே 3 விக்கெட்டுகளையும், அணியின் தலைவர் அஷான் டேனியல் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது அணியின் வெற்றிக்கு பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

போட்டி சுருக்கம்

முடிவு – புனித ஜோசப் கல்லூரி 11 ஓட்டங்களால் வெற்றி