இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறினார் டைமல் மில்ஸ்

ICC T20 World Cup – 2021

93
Tymal Mills

இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான டைமல் மில்ஸ் காயம் காரணமாக T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் குழு 1இல் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இங்கிலாந்து அணி இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று குறித்த பிரிவில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 6ஆம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக இருக்கும், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ், இறுதியாக நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியின் போது வலது தொடை தசைப்பிடிப்புக்கு உள்ளாகி போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார

அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமடைந்திருப்பது தெரியவந்ததுடன், அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதையடுத்து அவர் நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக ரீஸ் டொப்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இறுதியாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது டைமல் மில்ஸுக்கு வலது தொடை பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். உடனே அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது, காயத்தின் தன்மை பெரியதாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர்.

இதனால், அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வருகின்ற வேகப்பந்துவீச்சாளரான ரீஸ் டொப்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசியும் இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<