IPL வரலாற்றில் கோடிகளை அள்ளிய வீரர்கள்!

Indian Premier League

187

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரானது உலக அளவில் பொருளாதார ரீதியிலும், ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய முன்னணி தொடர்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

IPL தொடரின் மீதான மோகம் கிரிக்கெட் ரசிகர்களிடம் மாத்திரமின்றி, முதற்தர கிரிக்கெட் வீரர்களிடமும் அதிகரித்துவருகின்றது. குறிப்பாக IPL ஏலத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

குறைந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் போட்டியிடுவதற்கான காரணம் தொடரின் தரத்துக்காக மட்டுமல்ல. திறமைவாய்ந்த வீரர்களுக்கு IPL தொடர் கொட்டிக்கொடுக்கும் பணமும்தான். ஒவ்வொரு முன்னணி வீரர்களும் கோடிக்கணக்கான தொகையை ஒவ்வொரு வருடமும் பெற்றுவருகின்றனர்.

முன்னணி வீரர்களை தக்கவைத்து அவர்களுக்கு அதிகமான தொகையை IPL அணி உரிமையாளர்கள் வழங்கிவருவதுடன், ஏலத்தில் இடம்பெறும் முன்னணி வீரர்களுக்கும் கோடிகளை கொட்டித்தர IPL உரிமையாளர்கள் பின்வாங்குவதில்லை.

அதன்படி, 2008ஆம் ஆண்டு ஆரம்பமான IPL தொடரிலிருந்து பல முன்னணி வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகூடிய தொகை ஏலத்தின்போது வழங்கப்படுகின்றது. இதில் IPL வரலாற்றில் அதிகூடிய ஏலத்தொகையை பெற்ற வீரர்கள் தொடர்பில் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

செம் கரன் | இங்கிலாந்து | 18.50 கோடி (2023)

அண்மையில் கொச்சியில் நடைபெற்றுமுடிந்த IPL வீரர்கள் ஏலத்தில் IPL வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் செம் கரன் பெற்றுக்கொண்டார்.

கிரிஸ் மொரிஸின் 16.25 என்ற தொகையை மும்பை இந்தியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சுபர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் என கடுமையான போட்டிகள் இருந்தபோதும், பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடிக்கு (இந்திய ரூபாய்) அவரை வாங்கியது. செம் கரனின் அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கெமரூன் கிரீன் | அவுஸ்திரேலியா | 17.25 (2023)

இந்த ஆண்டு IPL ஏலம் ஆரம்பிக்கும் முன்னரிலிருந்து கெமரூன் கிரீன் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டுவந்தது. துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் இவருடைய திறமை அதிகமான அணிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இவ்வாறான நிலையில், இவருக்கான ஏலத்தை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பித்திருந்த நிலையில், பல அணிகள் இவரை வாங்குவதற்கு முற்பட்டிருந்தன. இதில் இறுதிவரை டெல்லி கெப்பிட்டல்ஸ் ஏலத்தில் மோதியிருந்தது. 2 கோடி ரூபாயிலிருந்து ஆரம்பித்த இந்த ஏலத்தை இறுதியாக 17.25 கோடிவரை டெல்லி மற்றும் மும்பை அணிகள் எடுத்துச்சென்றதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி 17.25 கோடிக்கு கிரீனை வாங்கியது. IPL வரலாற்றில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகூடிய ஏலத்தொகையாக இது மாறியுள்ளது.

குறிப்பாக அவர்களுடைய முன்னணி சகலதுறை வீரரான கீரன் பொல்லாரட் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவருக்கான மாற்று வீரராகவே கெமரூன் கிரீன் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் | இங்கிலாந்து | 16.25 கோடி (2023)

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவரும், சகலதுறை வீரருமான பென் ஸ்டாக்ஸிற்கு IPL ஏலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு ரைசிங் பூனே சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக 14.50 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த இவர், 2018ஆம் ஆண்டு 12.5 கோடிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு ராஜஸ்தான், பெங்களூர், லக்னோவ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் இம்முறை போட்டியிட்டிருந்தன.

இறுதியாக, சென்னை சுபர் கிங்ஸ் அணி ஏலத்தில் நுழைந்து 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை தங்களுடைய அணியில் இணைத்துக்கொண்டது. ரைசிங் புனே சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு பிறகு மகேந்திரசிங் டோனி தலைமையின் கீழ் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

கிரிஸ் மொரிஸ் | தென்னாபிரிக்கா | 16.25 கோடி (2021)

IPL வரலாற்றில் இந்த ஆண்டு ஏலத்துக்கு முதல் அதிகூடிய விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கிரிஸ் மொரிஸ்.

இவரை 2021ஆம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் பாரிய எதிர்பார்ப்புகளை கொண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வாங்கியது. இவருக்கான அடிப்படை விலையாக 75 இலட்சம் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 16.25 (இந்திய ரூபாய்) கோடிக்கு வாங்கியிருந்தது.

சகலதுறை வீரர்கள் IPL தொடரில் அதிக கவனத்தை ஈர்த்துக்கொள்வதால், வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரராக இவர் அணியில் இணைக்கப்பட்டார். தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய இவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும், துடுப்பாட்டத்தில் இவர் பிரகாசிக்க தவறினார். இவர் 13.40 என்ற சராசரியில் 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து ஏமாற்றமளித்தார்.

யுவ்ராஜ் சிங் | இந்தியா | 16 கோடி (2015)

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கிற்கு 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகள் IPL ஏலத்தில் மிகச்சிறந்த ஆண்டுகளாக அமைந்திருந்தன. 2014ஆம் ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 கோடிக்கு (இந்திய ரூபாய்) இவரை வாங்கிய அடுத்த வருடத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கெப்பிட்டல்ஸ்) 16 கோடிக்கு இவரை வாங்கியது.

குறிப்பிட்ட வருடத்தில் மிக அதிகமான தொகைக்கு வாங்கப்பட்டிருந்த போதும் இவருடைய பிரகாசிப்பு மோசமானதாகவே அமைந்திருந்தது. 2015ஆம் ஆண்டு இவர் 19.07 என்ற ஓட்ட சராசரியில் 248 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

இந்த பிரகாசிப்புகளுக்கு பின்னர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக இவர் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் பூரன் | மேற்கிந்திய தீவுகள் | 16 கோடி (2023)

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் இம்முறை இடம்பெற்ற ஏலத்தில் 16 கோடிக்கு வாங்கப்பட்டு ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக சகலதுறை வீரர்களுக்கு அதிகமான தொகையை அணிகள் வழங்கிவரும் நிலையில், கடந்த காலங்களில் சரியான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தாத ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட இந்த தொகை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் அதிரடியாக ஆடக்கூடிய இவரை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 16 கோடிக்கு வாங்கியிருந்தது. அதிலும் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் ஆரம்பத்தில் போட்டியிருந்ததுடன், இறுதி கட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதியிருந்தது. எனினும், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 16 கோடிக்கு நிக்கோலஸ் பூரனை வாங்கியுள்ளது.

பெட் கம்மின்ஸ் | அவுஸ்திரேலியா | 15.50 கோடி (2020)

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸை கடுமையான போட்டிக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

பெட் கம்மின்ஸிற்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் கடுமையான போட்டியை கொடுத்திருந்தபோதும் இறுதி தருணத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.50 கோடிக்கு இவரை வாங்கியது.

இவர் வேகமான அரைச்சதமொன்றை அடித்து ஆரம்பத்தில் கவனத்தை ஈர்த்திருந்தாலும் 15.50 கோடிக்கான பெறுமதியை பிற்பகுதி போட்டிகளில் கொடுக்கவில்லை. 14 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றிய இவர், 11 இன்னிங்ஸ்களில் 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

இஷான் கிஷன் | இந்தியா | 15.25 கோடி (2022)

இந்திய அணியின் இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷனுக்கு 2022ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டிருந்தது.

வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கக்கூடிய இவருக்கு ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியிட்டிருந்தன. தொடர்ந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் போட்டியிட்டிருந்தன. எனினும் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழாத்திலிருந்து விடுவித்திருந்த இஷான் கிஷனை 15.25 கோடிக்கு மீண்டும் அணியில் வாங்கியது.

அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் 14 போட்டிகளில் விளையாடி 3 அரைச்சதங்கள் அடங்கலாக 418 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும் இவருடைய ஓட்ட வேகமானது கடந்த ஆண்டிலிருந்து சடுதியாக குறைந்திருந்தமை அணிக்கு ஏமாற்றமளித்திருந்தது.

கைல் ஜெமிஸன் | நியூசிலாந்து | 15 கோடி (2021)

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜெமிஸனை 2021ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு (இந்திய ரூபாய்) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருந்தது.

பந்துவீச்சில் மாத்திரமின்றி துடுப்பாட்டத்தில் அணிக்கு தேவையான நேரங்களில் ஓட்டங்களை பெற்றுத்தரக்கூடிய இவரை வாங்குவதற்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் போட்டியிட்டிருந்தன. எனினும் இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி அவரை அணியில் இணைத்தது.

ஆனால் கைல் ஜெமிஸன் எதிர்பார்த்தளவு பிரகாசிப்புகளை வெளிப்படுத்தவில்லை. 9 போட்டிகளில் விளையாடிய இவர் 9 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்தில் 7 இன்னிங்ஸ்களில் 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

IPL வரலாற்றை பொருத்தவரை ஏற்கனவே அதிக தொகைக்கு வாங்கப்பட்டு விளையாடிய எந்தவொரு வீரரும் ஏலத்தொகைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் பிரகாசிப்புகளை வழங்கவில்லை.

இந்த ஆண்டு ஏலத்தை பொருத்தவரை செம் கரன், கிரிஸ் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹெரி புரூக் போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களுடைய பிரகாசிப்பு எவ்வாறு அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<