உலகக் கிண்ணத்தில் விக்கெட் காப்பாளராக சாதித்த சங்கக்கார!

4796

கிரிக்கெட்டில் களத்தடுப்பு என வந்துவிட்டால், அதிகம் விரும்பப்படும் களத்தடுப்பு இடங்களில் விக்கெட் காப்பு முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றது.  

வீதியோர கிரிக்கெட்டில் தொடங்கி, சர்வதேச கிரிக்கெட் வரை விக்கெட் காப்பாளராக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு தடவையேனும், ஒரு வீரர் மனதில் எழுந்திருக்கும். இவ்வாறு அனைவரும் விரும்புவதால், விக்கெட் காப்பாளராக செயற்படுவது இலகுவான விடயமல்ல.  

>> 2014 T20 உலகக் கிண்ண காலிறுதியில் என்ன நடந்தது?

கிரிக்கெட்டில் ஏனைய களத்தடுப்பாளர்களை விட, அதிகம் கவனமாகவும், ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடனும் இருக்க வேண்டிய ஒரே களத்தடுப்பாளர் விக்கெட் காப்பாளர்தான். இதில் என்ன சுவாரஷ்யம் என்றால், விக்கெட் காப்பாளரின் திறமையால் உலகக் கிண்ணமே கைவசமாகியுள்ளதுடன், அவர்களது சில சிறிய தவறுகளினால் திடுக்கிடும் தோல்விகளும் பரிசாக கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 

இப்படி, விக்கெட் காப்பாளர்கள் தொடர்பில் பேசுவதற்கு அதிகமான விடயங்கள் இருந்தாலும், நாம் இப்போது பார்க்கப்போவது கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்டிருக்கும் முதல் ஐந்து விக்கெட் காப்பாளர்களை தான்.

குமார் சங்கக்கார

இந்த வரிசையில் முதலிடத்தை பெற்றுக்கொள்பவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார. 2003ம் ஆண்டு முதன்முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற இவர், இறுதியாக 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்தார்.

Espncricinfo

குமார் சங்கக்கார, தனது கன்னி உலகக் கிண்ணத்தில் 17 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், தனது இறுதி உலகக் கிண்ணத்தில் 8 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார். அதேநேரம், உலகக் கிண்ணத் தொடர்களில் அதிகமாக 13 ஸ்டம்பிங் முறையிலான ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ள இவர், ஒட்டுமொத்தமாக 54 ஆட்டமிழப்புகளை உலகக் கிண்ணத் தொடர்களில் மேற்கொண்டு, இந்த பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

எடம் கில்கிறிஸ்ட் 

உலகின் மிகச்சிறந்த விக்கெட் காப்பாளர்களை வரிசைப்படுத்தினால், அவுஸ்திரேலியாவின் எடம் கில்கிறிஸ்ட் கட்டாயம் அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பார்.

மொத்தமாக 53 ஆட்டமிழப்புகளுக்கு சொந்தக்காரரான அவர், உலகக் கிண்ணத் தொடரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை வெறும் ஒரு விக்கெட்டினால் தவறவிட்டார். 

எனினும், 2003ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியதுடன், குறித்த உலகக் கிண்ணத் தொடரின் 10 இன்னிங்ஸ்களில் கில்கிறிஸ்ட் 21 ஆட்டமிழப்புகளை கைவசப்படுத்தியிருந்தார். அதேநேரம், இன்னிங்ஸ் ஒன்றில் 6 ஆட்டமிழப்புகளை பெற்றவர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் சர்பராஸ் அஹமட்டுடன் பகிர்ந்துக்கொண்டார்.  

குறித்த ஆறு விக்கெட்டுகளை 2003ம் ஆண்டு நம்பீபிய அணிக்கு எதிரான போட்டியில் இவர் பெற்றுக்கொண்டிருந்தார். 

மகேந்திரசிங் டோனி 

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி 2007ம் ஆண்டு கன்னி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடினாலும், 2015ம் ஆண்டு உலகக்  கிண்ண தொடர் நிறைவின்போது, 32 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு, பிரெண்டன் மெக்கலமுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துக்கொண்டார். 

>> பானுகவின் உடற்தகுதி தொடர்பில் மிக்கி ஆர்தர் கூறியது என்ன?

குறித்த ஆண்டு 15 ஆட்டமிழப்புகளை தன்வசம் வைத்துக்கொண்டிருந்ததுடன், இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு 10 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு மொத்தமாக 42 ஆட்டமிழப்புகளுக்கு சொந்தக்காரரானார். இதுவரையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறாத டோனி, மீண்டும் அணிக்குள் நுழைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதன்படி, 2023ம் ஆண்டு டோனி விளையாடினால், மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது அல்லது முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பும் அவருக்கு ஏற்படும். 

ப்ரெண்டன் மெக்கலம்

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ப்ரெண்டன் மெக்கலம் மொத்தமாக 32 ஆட்டமிழப்புகளுடன், 4வது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர், இறுதியாக 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்ததுடன், குறித்த தருணத்தில், டோனியின் ஆட்டமிழப்புகளை சமப்படுத்தியிருந்தார்.

இவர் மொத்தமாக 34 போட்டிகளில் விளையாடியிருந்தாலும், 25 இன்னிங்ஸ்களில் மாத்திரமே விக்கெட் காப்பாளராக செயற்பட்டிருந்தார். இவரின் விக்கெட் காப்பு பணியின் பொற்காலம், 2007ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணம். குறித்த தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மார்க் பௌச்சர்

தென்னாபிரிக்காவின் மார்க் பௌச்சர் டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றிய 555 ஆட்டமிழப்புகளை எந்தவொரு விக்கெட் காப்பாளரும் இன்றுவரை நெருங்கவில்லை. ஆனாலும், உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஆட்டமிழப்புகளை பெற்றவர்கள் வரிசையில், 31 ஆட்டமிழப்புகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 

1999ம் ஆண்டு கன்னி உலகக் கிண்ணத்தில் விளையாடிய இவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதே எண்ணிக்கையை 2003ம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் கைப்பற்றினார். 

மார்க் பௌச்சர் 25 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<