பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

2020 Tokyo Paralympics

99

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் 10ஆம் நாளான இன்றைய தினம் இலங்கை சார்பாக மூன்று வீரர்கள் போட்டிளில் பங்குபற்றியிருந்தனர்.

பெண்களுக்கான நீளம் பாய்தலில் குமுது பிரியங்கா, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் மதுரங்க சுபசிங்க மற்றும் ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டியில் சம்பத் பண்டார ஆகியோர் களிமிறங்கினர்.

இதில் குமுது பிரியங்கா, நீளம் பாய்தலில் தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்ய, மதுரங்க சுபசிங்க நூழிலையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.

குமுதுவுக்கு 9ஆவது இடம்

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான T47 பிரிவு நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட குமுது பிரியங்கா, 4.92 மீட்டர் தூரம் பாய்ந்து 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆறு முயற்சிகள் கொண்ட இப் போட்டியின் முதல் முயற்சியில் 4.92 மீட்டர் தூரம் பாய்ந்த குமுது ப்ரியங்கா, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியைப் பதிவுசெய்தார். அடுத்த 2 முயற்சிகளிலும் முறையே 4.77 மீட்டர், 4.73 மீட்டர் ஆகிய தூரங்களை அவர் பதிவுசெய்தார்

இதன்படி, முதல் 3 முயற்சிகளிலும் 5.00 மீட்டரை எட்டத் தவறியதால் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக இவர், குறித்த பிரிவுக்கான 100 மீட்டர் தகுதிகாண் சுற்றில் பங்குகொண்டு எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியில் 5.76 மீட்டர் தூரம் பாய்ந்த நியூசிலாந்தின் அனா க்ரிமோல்டி, புதிய பாராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா மொகுச்சாயா (5.67 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், ஈக்வடோரின் கியாரா ரொட்றிகஸ் (5.63 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பாராலிம்பிக் 100 மீட்டரில் குமுது பிரியங்காவுக்கு தோல்வி

இந்தப் போட்டியில் தனது அதிசிறந்த தூரத்தை குமுது பிரியங்கா பதிவுசெய்தாலும், பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.

மதுரங்கவுக்கு ஏமாற்றம்

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான T47 பிரிவு 400 மீட்டர் தகுதிகாண் சுற்றில் பங்குகொண்ட மதுரங்க சுபசிங்க, நான்காவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது தகுதிகாண் சுற்றில் நான்காவது சுவட்டில் ஓடிய அவர், முதல் 350 மீட்டர் வரை 3ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.

எனினும், கடைசி 50 மீட்டரில் பின்னடைவை சந்தித்த அவர், போட்டியை 51.08 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தத் தகுதிகாண் சுற்றில் பிரேசில் வீரர் தோமஸ் ருஅன் மொரேஸ் (49.95 செக்.), முதலிடத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் டென்னர் ரைட் (50.10 செக்.), மற்றும் டொமினிக்கன் குடியரசின் லூயி அண்ட்ரெஸ் வாஸ்கெஸ் செகுரா (50.94 செக். ஆகியோர் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

Photos: Tokyo Paralympic Games 2020 – Day 5

சம்பத்துக்கு தோல்வி 

இதேவேளை, இம்முறை பாராலிம்பிக்கில் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தை நிரல்படுத்தல் போட்டியில் 589 புள்ளிகளுடன் 23ஆவது இடத்தைப் பிடித்த இலங்கையின் சம்பத் பண்டார, இன்று தகுதிநீக்கம் சுற்றுப் போட்டியில் பங்குகொண்டார்.

நிரல்படுத்தல் போட்டியில் 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இந்தியாவின் விவேக் ஷிகாராவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 4 செட்களில் 2 – 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

முதல் செட்டின் முதலாவது எய்தலில் இருவரும் அதிகப்பட்ச 10 புள்ளிகளைப் பெற்றனர். ஆனால் அடுத்த 2 எய்தல்களில் விவேக் 6-5, 9-7 (25-22) என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்று முதலாவது செட்டுக்கான 2 புள்ளிகளைப் பெற்றார்.

இரண்டாவது செட்டில் 3 எய்தல்களில் 7-6, 9-8, 9-10 (25-24) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற சம்பத் பண்டார செட்களுக்கான புள்ளிகள் நிலையை 2 – 2 என சமன் செய்தார்.

எனினும் அடுத்த 2 செட்களிலும் முறையே 9-7, 9-7, 7-7 (25-21) எனவும் 8-6, 8-6, 9-9 (25-21) எனவும் வெற்றிபெற்ற விவேக் ஷிகாரா, 6-2 என்று புள்ளிகள் அடிப்படையில் காலிறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<