ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் திறன்களை கையாளும் பாகிஸ்தான் பேஸ்போல் அணி

177
Image courtesy - ARYSports

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு விழாவில், பேஸ்போல் போட்டியில் பங்கேற்று வரும் பாகிஸ்தான் அணி, தங்களது கிரிக்கெட் திறன்களை அடிப்படையாக கொண்டு விளையாடி வருவதாக தெரிவித்துள்ளது.

வட அமெரிக்காவில் மிக பிரசித்திப்பெற்ற பேஸ்போல் விளையாட்டானது, ஆசியாவில் அவ்வளவுக்கு பிரசித்தி பெற்றிருக்கவில்லை. முக்கியமாக தெற்காசியாவின் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் பேஸ்போலை விட கிரிக்கெட்டுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் பாகிஸ்தான் தற்போது தங்களது கிரிக்கெட் திறன்களை அடிப்படையாக வைத்து, பேஸ்போல் அணியை பலப்படுத்தி வருகின்றது. 26 வருடங்களாக பேஸ்போல் விளையாடி வரும் பாகிஸ்தான், தற்போது சர்வதேச பேஸ்போல் தரவரிசையில் 28வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று (27) ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெற்ற பேஸ்போல் போட்டியில் தாய்லாந்து அணியை 8-1 என பாகஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. குறித்த வெற்றியின் பின்னர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் தங்களது பயிற்சி தொடர்பில் அல்-ஜசீரா செய்தி இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்போல் பயிற்சி குறித்து கருத்து வெளியிட்ட பயிற்றுவிப்பாளர் செயட் பாபர் அலி கான் குறி்ப்பிடுகயைில்,

“நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட் வம்சாவளியில் இருந்து வந்தவர்கள். கிரிக்கெட் மற்றும் பேஸ்போல் என்ற இரண்டுக்கும் பெரியளவு வித்தியாசம் இல்லை. நாங்கள் கிரிக்கெட்டின் திறன்கள் மற்றும் யுத்திகளை பயன்படுத்தியே பேஸ்போல் போட்டியில் விளையாடுகின்றோம். எமது பேஸ்போல் வெற்றிக்கு கிரிக்கெட் பெரிதும் உதவியாக உள்ளது.

அத்துடன், கிரிக்கெட் விளையாடியிருந்தாலும் நாம் பேஸ்போல் விளையாட்டை விரும்புகின்றோம். ஆனால் கிரிக்கெட்டுக்கு முற்றுமுழுதாக ஓய்வு கொடுக்காமல், சிறிய இடைவெளிகளில் கிரிக்கெட்டும் விளையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் அணியின் முன்னணி பேஸ்போல் பந்து வீச்சாளர் (Baseball Pitcher) இசான் உல்லா குறிப்பிடுகையில்,

“நான் கிரிக்கெட்டிலிருந்து பேஸ்போல் விளையாடிய போது, பெரிய மாற்றங்கள் இருப்பது எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட்டில் பந்து மைதானத்தை தொட்டு, பின்னர் துடுப்பாட்ட வீரரை அடையும். ஆனால் பேஸ்போலில் அப்படி இல்லை. பந்து தரையில் படாமல் நேரடியாக பந்தை அடிப்பவரிடம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போது இலகுவாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடிய பின்னர் பேஸ்போல் விளையாடுவதால், எந்தவித கஷ்டங்களும் தெரியவில்லை” என குறிப்பிட்டார்.

சர்வதேச பேஸ்போல் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 28வது இடத்தை பிடித்துள்ளதுடன், ஆசிய தரவரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை பேஸ்போல் விளையாடும் இலங்கை அணி, உலக தரவரிசையில் 40வது இடத்தையும், ஆசியாவில் 7வது இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.