இரண்டாவது LPL ஏலத்தில் சிரேஷ்ட வீரர்கள் நீக்கம்; புதுமுக வீரர்கள் அறிமுகம்

Lanka Premier League 2021

221

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) வீரர்கள் வரைவு இன்று (09) நடைபெற்றுமுடிந்த நிலையில் தென்னாபிரிக்க வீரர்களான பெப் டு பிளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹீர், மே.தீவுகள் வீரர்களான ரோவ்மன் பவல் மற்றும் கிரிஸ் கெயிலுடன், பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் வெளிநாட்டு ஐகோன் வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த வருடம் ஜப்னா அணியில் இணைக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் வீரர்களான சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் மிதவேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களான தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் ரத்னராஜா தேனுரதன் ஆகியோர் இம்முறையும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், மற்றுமொரு தமிழ்பேசும் சகலதுறை வீரரான கனகரத்தினம் கபில்ராஜ் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் சமாஸ் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியிலும், மதூஷன் ரவிச்சந்திரகுமார் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காகவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

>> மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் திரிமான்ன

LPL தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான வீரர்கள் ஏலம் இன்று இடம்பெற்றது. இம்முறை LPL தொடரில், கோல் கிளேடியேட்டர்ஸ், கண்டி வொரியர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதில், மேற்குறிப்பிட்ட ஐகோன் வீரர்களுடன் பாகிஸ்தானின் சொஹைப் மலிக், வஹாப் ரியாஸ், தென்னாபிரிக்காவின் தப்ரைஷ் ஷம்ஷி, இங்கிலாந்தின் சமித் பட்டேல் போன்ற முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இந்த வரைவில் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற தொடர்களில் பிரகாசித்துவந்த மினோத் பானுக, ஷிரான் பெர்னாண்டோ, ஹிமேஷ் ராமநாயக்க, சதீர சமரவிக்ரம, பிரவீன் ஜயவிக்ரம, நிஷான் மதுஷ்க, நிபுன் தனன்ஜய மற்றும் செஹான் ஆராச்சிகே போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

LPL தொடர், டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

அணிக்குழாம்களின் விபரம்

கொழும்பு ஸ்டார்ஸ் குழாம்

கிரிஸ் கெயில் (மே.தீவுகள்), துஷ்மந்த சமீர, அஹ்மட் சேஷார்ட் (பாகிஸ்தான்), டில்ஷான் முனவீர, மொஹமட் இர்பான் (பாகிஸ்தான்), அல் அமின் ஹொசைன் (பங்களாதேஷ்), டஸ்கின் அஹ்மட் (பங்களாதேஷ்), பெதும் நிஸ்ஸங்க, லக்ஷான் சந்தகன், சீகுகே பிரசன்ன, மன்பிரீட் சிங், கிஹான் ரூபசிங்க, லஹிரு கமகே, டி.எம்.சம்பத், நுவனிந்து பெர்னாண்டோ, ஜெஹான் டேனியல், மலிந்து மதுரங்க, நலின் பிரியதர்ஷன, துமிந்து ரணசிங்க, கனகரத்தினம் கபில்ராஜ்

ஜப்னா கிங்ஸ் குழாம்

பெப் டு பிளசிஸ் (தென்னாபிரிக்கா), திசர பெரேரா, வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக் (பாகிஸ்தான்), உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் தரங்க, சதுரங்க டி சில்வா, ஜெய்டன் சீல்ஸ் (மே.தீவுகள்), சுரங்க லக்மால், அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷன, சாமிக குணசேகர, விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன், அஷேன் ரந்திக, ரத்னராஜா தேனுரதன், கிரிஷான் சஞ்சுல

கண்டி வொரியர்ஸ் குழாம்

ரோவ்மன் பவல் (மே.தீவுகள்), சரித் அசலங்க, கெமரோன் டெல்போர்ட், லஹிரு குமார, மொஹமட் மிதுன், நஜ்முல் இஸ்லாம், மெஹிதி ஹசன் ரானா, அஞ்செலோ பெரேரா, அசேல குணரத்ன, மிலிந்த சிறிவர்தன, அம்ஜட் கான், இஷான் ஜயரத்ன, பினுர பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, அயன சிறிவர்தன, நிமேஷ் விமுக்தி, உதார ஜயசுந்தர, சஷிக டுல்ஷான், கல்ஹார சேனாரத்ன

தம்புள்ள ஜயண்ட்ஸ் குழாம்

இம்ரான் தாஹீர் (தென்னாபிரிக்கா), தசுன் ஷானக, ரெய்லி ரூஷோவ் (தென்னாபிரிக்கா), சாமிக்க கருணாரத்ன, சொஹைப் மக்சூட் (பாகிஸ்தான்), ஒடேன் ஸ்மித் (மே.தீவுகள்), ஜோஸ் லிட்ல் (அயர்லாந்து), நிரோஷன் டிக்வெல்ல, நுவான் பிரதீப், ரமேஷ் மெண்டிஸ், நஜிபுல்லாஹ் ஷர்டான் (ஆப்கானிஸ்தான்), தரிந்து ரத்நாயக்க, லஹிரு உதார, சச்சி டி அல்விஸ், முதித லக்ஷான், கலன பெரேரா, சச்சித்த ஜயதிலக்க, ரவிச்சந்திரகுமார், ஜனித் லியனகே, சமிகர எதிரிசிங்க

கோல் கிளேடியேட்டர்ஸ் குழாம்

மொஹமட் அபீஸ் (பாகிஸ்தான்), இசுரு உதான, டெப்ரைஷ் ஷம்ஷி (தென்னாபிரிக்கா), குசல் மெண்டிஸ், மொஹமட் அமீர், சமித் பட்டேல், சர்பராஸ் அஹமட், பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, தனன்ஜய லக்ஷான், அன்வர் அலி (பாகிஸ்தான்), புலின தரங்க, நுவான் துஷார, லஹிரு மதுஷங்க, டில்ஷான் மதுஷங்க, அஷைன் டேனியல், கெவின் கொத்திகொட, மொஹமட் சமாஸ், சுமிந்த லக்ஷான், அஞ்செலோ ஜயசிங்க

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<