ஜொப் மைக்கலின் ஹட்ரிக் கோலினால் போட்டியை வென்ற ரினௌன்

395
 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் டயலொக் சம்பியன்ஸ் கிண்ணச் சுற்றுப் போட்டிகளின் இன்றைய தினத்திற்கான போட்டியில் கொழும்பு ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் கம்பளை கிரிஸ்டல் பெலஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் போது ரினௌன் கழகத்தின் முன்கள வீரரான ஜொப் மைக்கல் (Job Michael) மூலம் பெறப்பட்ட ஹட்ரிக் கோலினால் 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ரினௌன் கழகம் வென்றது.

நாவலப்பிட்டி ஐயதிலக விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியை கிரிஸ்டல் பெலஸ் அணி ஆரம்பித்தது. இலங்கையின் முன்னனி கால்பந்து வீரர்களைக் கொண்ட ரினௌன் கழகத்தின் விளையாட்டை போட்டி ஆரம்பித்தது முதல் முறியடிக்க முயற்சித்த கிரிஸ்டல் பெலஸ் அணிக்கு சிறந்த முறையில் சவால் கொடுத்தது ரினௌன் அணி.

போட்டி ஆரம்பித்து முதல் 4 நிமிடத்திலேயே ரினௌன் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. மத்தியகளத்தின் வலது மூலையிலிருந்து தூரப்பந்து பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட பந்தை சிறப்பாக பெற்ற முஹமட் ஆஸாத், கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை சிறப்பாக கோலினுள் உட்செலுத்தினார்.

போட்டியின் போக்கை அறிந்த கிரிஸ்டல் பெலஸ் அணி மிகவும் வேகமாக செயற்பட்டு எதிரணிக்கு பதிலடி கொடுத்தது. ரினௌன் அணி போட்டியில் முன்னிலை பெற்று வெறும் 4 நிமிடங்கள் கழிந்ததன் பின்னர்,  கிரிஸ்டல் பெலஸ் அணியின் முன்கள வீரரான முஹமட் பாஸித் மூலம் போட்டி சமநிலைப்படுத்தப்பட்டது.

போட்டி சமநிலையுற்றதன் பின்னர் ரினௌன் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் அதிகமாக வைத்திருந்தது. அதன் விளைவாக 19ஆவது நிமிடத்தில் முஹமுட் முஐப் மூலம் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை, முஹமட் ஆஸாத் தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் சிறப்பாக செயற்பட்ட கிரிஸ்டல் பெலஸ் அணியின் பின்கள வீரர்களால் பந்து தடுக்கப்பட்டது.

பலம் கொண்ட மற்றொரு அணியை வீழ்த்தியது சுபர் சன்

எதிரணியின் மத்தியகளத்திலிருந்து போட்டியை வெகுநேரமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ரினௌன் அணி, இரண்டாவது கோலை போட்டியின் 21ஆவது நிமிடத்தில் பெற்றது. முஹமட் ரிஸ்னி மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற ஜொப் மைக்கல், பின்கள வீரர்களையும் தாண்டி பந்தை சிறப்பாக கோலினுள் செலுத்தினார். இக்கோலின் மூலம் ரினௌன் அணி போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 25ஆவது நிமிடத்ததில் கிரிஸ்டல் பெலஸ் அணியின் கோல் காப்பாளர் மூலம், ரினௌன் அணி கோலை பெறுவதற்காக எடுத்த முயற்சியின் போது தடுத்தாடப்பட்ட பந்தை பெற்ற ஜொப் மைக்கல் மூலம் தனது அணிக்கான மூன்றாவது கோலும் பெறப்பட்டது.

இப்பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன் கிண்ணத்திற்கான போட்டிகளில் அதிக எண்ணிக்கையான கோல்களைப் பெற்றுள்ள ஜொப் மைக்கல், போட்டியின் 32ஆவது நிமிடத்தில் இன்றைய போட்டிக்கான ஹட்ரிக் கோலைப் பெற்றார். போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் போது தன்னையடைந்த பந்தை, வலதுபக்க மூலையால் உட்செலுத்தி ரினௌன் அணியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலைப்படுத்தினார்.

ஜொப் மைக்கல் மூலம் பெறப்பட்ட ஹட்ரிக் கோலின் மூலம் இப்பருவகாலத்திற்கான அதிகூடிய கோல்களைப் பெற்றோர் பட்டியலில் 13 கோல்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றார்.

ரினௌன் அணி தொடராக சவால் விடுத்த போதும் கிரிஸ்டல் பெலஸ் அணியால் அதற்கு பதிலடி கொடுக்க இயலாமல் போனதை அவதானிக்க முடிந்தது. ரினௌன் அணி பெற்ற 4 கோல்களுடன் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 1 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்

இரண்டாம் பாதியை ஆரம்பித்த ரினௌன் அணி போட்டியில் பல சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டது. எனினும் இரண்டாம் பாதிக்கான முதல் முயற்சியை, போட்டியின் 53ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பெலஸ் அணியின் முஹமட் பாஸித் கோலை நோக்கி மத்தியகளத்திலிருந்து வேகமாக உதைந்ததின் மூலம் எடுக்கப்பட்டது. எனினும் இம்முயற்சியை ரினௌன் அணியின கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.

பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்த வண்ணம் எதிரணியை கலங்க வைத்துக் கொண்டிருந்த ரினௌன் அணி, போட்டியின் 62ஆவது நிமிடத்தில் மேலுமொரு கோலை பெறுவதற்கான சிறந்த முயற்சியை நழுவவிட்டது. முஹமட் நிப்ராஸ், ஜொப் மைக்கல் மற்றும் பவாரே முஹம்மட் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் எந்த வித பின்கள வீரருமின்றி, எதிரணியின் கோலியின் முன்னிலையில் பெற்ற சிறந்த வாய்ப்பை ஜொப் மைக்கல் கோலாக்குவதில் தோல்வியுற்றார்.

இறுதி நிமிட கோலினால் இராணுவப்படையை வீழ்த்திய ரினௌன்

முதல்பாதியை விட, இரண்டாம் பாதியில் சற்று சிறப்பாக செயற்பட்ட கிரிஸ்டல் பெலஸ் அணியால், இரண்டாம் பாதியில் சிறந்த பந்து பரிமாற்றங்களை மட்டுமே மேற்கோள்ள முடிந்நது. எனினும் தொடராக பந்தை கட்டுப்பாட்டில் வைத்த ரினௌன் அணி போட்டியின் 75ஆவது நிமிடத்தில் மீண்டும் முஹமட் நிப்ராஸ் மூலம், தனது அணியின் மத்தியகளத்திலிருந்து எதிரணியின் பெனால்டி எல்லைக்கு வழங்கிய பந்தை பெற்ற ஜொப் மைக்கல், பந்தை பெனால்டி எல்லை வரை கொண்டு சென்றபோதும் அவரால் கோல் எதுவும் பெற முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து 82ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையிலிருந்து நிப்ராஸ் மூலம் உதையப்பட்ட பந்தை கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார். இம்முயற்சியின் போது ரினௌன் வீரர்களுக்கிடையே சிறந்த பந்துப் பரிமாற்றம் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.

மீண்டும் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ரினௌன் அணி மூலம் எடுக்கப்பட்ட முயற்சியின் போது பெனால்டி எல்லையின் வலது மூலையிலிருந்து முஹமட் நிப்ராஸ் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை முஹமட் ஆஸாத் தலையால் முட்டி கோலாக்கிய போதும், நடுவர் ஓப்ஸைடாக (Off side) அறிவித்து கோலை வழங்க மறுத்தார்.

அத்துடன் முதல் பாதியில் பெற்ற 4 கோல்களால் ரினௌன் அணி 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. மேலும் போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரினௌன் அணி பந்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கூடுதலாக வைத்து எதிரணிக்கு சவால் கொடுப்பதில் வெற்றி கண்டதை அவதானிக்க முடிந்தது.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 1 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – முஹமட் ஆஸாத் 4’, ஜோப் மைக்கல் 22’, 25’ & 32’

கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – முஹமட் பாஸித் 8’