பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு திரும்பும் சகிப், தஸ்கின்

53
Bangladesh Cricket

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல, பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரரான சகிப் அல் ஹசனையும் இந்த தொடரில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடருக்கான ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில் பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குறித்த வீரர்கள் இருவருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அஹ்மட்டுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2023 ஜூன் மாதம் டெஸ்டில் விளையாடி இவர், தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து குணமடைவதற்கு முன்னுரிமை அளிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தார், எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் மாத்திரம் தான் தஸ்கின் அஹ்மட் விளையாடுவார் என அந்நாட்டு தேர்வுக் குழுவின் தலைவர் காஸி அஷ்ரப் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

எனவே, காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் பங்காளதேஷ் அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்காளதேஷ் டெஸ்ட் அணி விபரம் 

 

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (தலைவர்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், சகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அஹ்மட், சையத் காலித் அஹ்மட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<