T20 உலகக் கிண்ண இந்திய அணியில் மாற்றம்

ICC T20 World Cup – 2021

558
AFP

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பாரக்கப்பட்டது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவின் உடல் நிலை குறித்து கேள்விகள் எழுந்து வந்தன.

மேலும், தற்போது நடைபெற்று வருகின்ற IPL தொடரில் சிறப்பாக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் அவேஷ் கான் மற்றும் துடுப்பாட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், குறித்த இரண்டு வீரர்களும் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு உதவும் வீரர்களாக கொரோனா பாதுகாப்பு வலயத்தில் இந்திய அணியுடன் இருப்பார்கள் என BCCI தெரிவித்துள்ளது.

இதனிடையே, T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து இறுதி அறிவிப்பு அந்தந்த அணிகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ICC அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் அக்ஷர் பட்டேல் மேலதிக வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக மேலதிக வீரர்கள் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் ஷர்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட பிரதான குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணி IPL தொடர் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஒக்டோபர் 18ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்த்து முதல் பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறது.

அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 20ஆம் திகதி இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது.

இதுஇவ்வாறிருக்க, இந்திய கிரிக்கெட் அணி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் ஒக்டோபர் 24ஆம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாம்:

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட் (விக்கெட் காப்பாளர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிசந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், மொஹமட் ஷமி

மேலதிக வீரர்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், அக்ஷர் பட்டேல்

இந்திய அணி வீரர்களின் பயிற்சிக்கு உதவும் வீரர்கள்:

அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரன் சர்மா, ஷாபாஸ் அஹமட், கே.கௌதம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…