T10 லீக் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள்

77

T10 லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்று அபுதாபி ஷேக் ஸெயத் மைதானத்தில் நேற்று (23) நிறைவுக்கு வந்திருந்தது.

குவாலிபயர் 1 – மராத்தா அரபியன்ஸ் எதிர் கலந்தர்ஸ்

T10 லீக்கின் முதல் குவாலிபையர் போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணி கலந்தர்ஸ் அணியினை 7 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

T10 இல் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய கசுன் ராஜித, லஹிரு குமார

T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாளுக்குரிய (22) போட்டிகளுடன்…

T10 லீக்கில் ஏற்கனவே நடைபெற்ற குழுநிலை மோதல்களுக்கு அமைவாக புள்ளிகள் அட்டவணையில் முதலாம், இரண்டாம்  இடங்களைப் பெற்ற மராத்தா அரபியன்ஸ் அணியும், கலந்தர்ஸ் அணியும் முதல் குவாலிபயர் போட்டியில் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மராத்தா அரபியன்ஸ் அணி அதன் தலைவர் கிறிஸ் லின்னின் அதிரடி அரைச்சதத்துடன் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்கள் குவித்தது.

இப்போட்டியின் மூலம் இந்த T10 லீக்கில் நான்காவது தடவையாக அரைச்சதம் பெற்ற கிறிஸ் லின், 30 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற்றார்.

இதேநேரம் கலந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜோர்டான் கிளார்க் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 120 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெரும் 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

கலந்தர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக லோரி ஈவான்ஸ் 35 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் அவரது துடுப்பாட்டம் வீணானது.

மறுமுனையில், மராத்தா அரபியன்ஸ் அணியின் வெற்றியினை மிச்செல் மெக்லனகன், ட்வெய்ன் பிராவோ மற்றும் சிராஸ் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம் 

மராத்தா அரபியன்ஸ் – 119/6 (10) கிறிஸ் லின் 67(30), ஜோர்டான் கிளார்க் 20/4(2)

கலந்தர்ஸ் – 112/4(10) லோரி ஈவான்ஸ் 35(17)*, சிராஸ் அஹ்மட் 11/1(2)

முடிவு – மராத்தா அரபியன்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றி 


எலிமினேட்டர் – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் எதிர் பங்ளா டைகர்ஸ்

T10 லீக்கின் எலிமினேட்டர் போட்டியில் பங்ளா டைகர்ஸ் அணியினை டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருந்தது.

ஏற்கனவே நடைபெற்ற குழுநிலை மோதல்களுக்கு அமைய புள்ளிகள் அட்டவணையில் மூன்றாம், நான்காம் இடங்களைப் பெற்ற டெக்கான் கிளேடியேட்டர்ஸ் மற்றும் பங்ளா டைகர்ஸ்  அணி ஆகியவை T10 லீக்கின் எலிமினேட்டர் போட்டியில் மோதின. 

போட்டியில் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட திசர பெரேரா தலைமையிலான பங்ளா டைகர்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைக் குவித்தது. பங்ளா டைகர்ஸ் அணியின் சார்பில் ரில்லி ருசோ 29 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் செல்ட்டோன் கொல்ட்ரல் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 108 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 9.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றி டேனியல் லோரன்ஸ் வெறும் 13 பந்துகளுக்கு பெற்ற 33 ஓட்டங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. 

இதேநேரம், பங்ளா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில் கைஸ் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை சாய்த்து போராட்டத்தை காண்பித்த போதிலும் அது வீணானது. 

போட்டியின் சுருக்கம்

பங்ளா டைகர்ஸ் – 107/3(10) ரில்லி ரூசோ 55(29), செல்டோன் கொல்ட்ரல்  15/2(2)

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 108/5(9.1) டேனியல் லோரன்ஸ் 33(13), கைஸ் அஹ்மட் 16/2(2)

முடிவு – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


குவாலிபயர் 2 – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் எதிர் கலந்தர்ஸ் 

T10 லீக்கின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் 12 ஓட்டங்களால் கலந்தர்ஸ் அணியினை தோற்கடித்த டெக்கான் கிளேடியேட்டர்ஸ் வீரர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் இரண்டாவது அணியாக மாறினர்.

T10 லீக்கின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில், முதல் குவாலிபயர் போட்டியில் தோல்விடையந்த கலந்தர்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியும் மோதின.

சதீர, தனஞ்சய டி சில்வாவின் அதிரடிக்கு ஏமாற்றம் கொடுத்த சீரற்ற காலநிலை

வர்த்தக நிறுவனங்கள் சங்கத்தினால் 27ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்ப்பட்ட…

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை குவித்தது.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பென் கட்டிங் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்று போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதேநேரம், கலந்தர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக சமிட் பட்டேல் 3 விக்கெட்டுக்களை சாய்க்க ஜோர்டான் கிளார்க் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

கலந்தர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அம்ஜாட் குல் 32 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார். 

இதேநேரம் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் பவாட் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 116/7(10) பென் கட்டிங்க் 43(19)*, சமிட் பட்டேல் 26/3(2)

கலந்தர்ஸ் – 104/4(10) அம்ஜாட் குல் 32(21), பவாட் அஹ்மட் 9/2(2) 

முடிவு – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றி

T10 லீக்கின் குவாலிபயர் சுற்றுக்கு அமைவாக அதன் இறுதிப் போட்டியில் இன்று (24) மராத்தா அரபியன்ஸ் மற்றும் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<