ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகாவுக்கு ஆலோசகர் பதவி

151

இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், 2000ஆம் ஆண்டு சிட்னி ஓலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான ஆசியாவின் இரும்புப் பெண் என அழைக்கப்படுகின்ற  சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு செயற்றிட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவருக்கான நியமன கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை (28) வழங்கிவைத்தார். அதன்பிரகாரம் கொழும்பு ௦7 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆசிய பரா விளையாட்டு விழாவில் 35 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

மூன்றாவது ஆசிய பரா விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம்…

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையினால், இப்பதவிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றதுடன், நாடு முழுவதும் சென்று விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பிரத்தியேக வாகனம், காரியாலயம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுசந்திகாவுக்கு இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து வெளியிடுகையில், இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த ஒரேயொரு வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவிடம் இருந்து எமது நாட்டின் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்துக்கு பெற்றுக்கொண்ட சேவைகள் மிகவும் குறைவு. பல்வேறு கஷ்டத்துக்கு மத்தியில் முழு உலகையும் வெற்றிக்கொண்ட சுசந்திகா ஜயசிங்க, எமது இளம் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். அதேபோல எமது வீரர்களுக்கு அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. எனவே, நாடு முழுவதும் சென்று திறமையான வீரர்களை இனங்காணும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகும் அவர் பல்வேறு இன்னங்களுக்கு முகங்கொடுத்திருந்தார். எனவே அவருக்கு வழங்குகின்ற கௌரவமாக இந்தப் பதவியை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனக்கு இந்தப் பதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு மனமாந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்காக பெருமையைத் தேடிக் கொடுத்த வீரர்களுள் ஒருவராக எனக்கு கிடைத்த இந்தப் பதவியைக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக பல சேவைகளை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். இதற்கு எனது காலங்களை முழுமையாக அர்ப்பணிப்பு செய்யவும் தயாராகவுள்ளேன். என்னுடைய அனுபவத்தினைப் பயன்படுத்தி இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக பல சேவைகளை செய்ய முடியும் என நம்புகிறேன். நாட்டுக்கு சேவையாற்ற சிறந்த தலைமைத்துவம் தேவை.அதற்கு தற்போதுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த முன் உதாரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தியகமவில் இடம்பெறும் 21ஆவது இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகள்

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில்…

முன்னதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பதவிக் காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளுக்கு வீரர்களைத் தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான விசேட ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த பதவிக்கான போதியளவு வசதிகள் கிடைக்கப் பெறாமை உள்ளிட்ட காரணங்களால் அவர் குறித்த பதவியில் இருந்து இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<<