இலங்கையுடனான ஒரு நாள் தொடரிலிருந்து ஆமிர் விலகல்

485
Muhammad Amir replaced by Usman Khan

வலது கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் விலகியுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரில் 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் கான் ஷின்வாரி பாகிஸ்தான் ஒரு நாள் குழாமில் முதற்தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஒருநாள் குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து….

பாகிஸ்தான்இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக தற்பொழுது டுபாயில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2ஆவது நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் பந்துவீச முற்பட்ட போது வலது கால் தொடையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு, எம்.ஆர்.. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதன் காரணமாக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் நாளில் ஆமிர் 17.3 ஓவர்கள் வீசிய போது உபாதைக்குள்ளாகி மைதானத்தலிருந்து உடனே வெளியேறினார். அதனைத்தொடர்ந்து எஞ்சிய 3 பந்துகளை யாஷிர் ஷா வீசியிருந்தார். ஆனால் போட்டி நிறைவடைந்த பிறகு வைத்திய ஆலோசனைப்படி ஆமிருக்கு ஓய்வளிக்க வேண்டும் என அணி முகாமைத்துவத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணி முகாமைத்துவத்தின் இறுதி நேர முடிவில் போட்டியின் 2ஆவது நாளில் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஆமிர், 11ஆவது ஓவரில் 3 பந்துகளை வீசிய போது மீண்டும் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு, எம்.ஆர்.. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது வலது கால் தொடையில் காயம் ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எனினும், பாகிஸ்தான் அணி முகாமைத்துவம் ஆமிருக்கு முதல் நாள் இரவு, எம்.ஆர்.. ஸ்கேன் பரிசோதனையை செய்து பார்க்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் மீண்டும் அவரை 2ஆவது நாளில் பந்து வீசுவதற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது…

ஏற்கனவே, இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த ஆமிர், எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அவர் தொடர்ந்து பந்து வீசாவிட்டாலும் முதல் இன்னிங்ஸில் அவர் துடுப்பெடுத்தாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூதாட்ட சர்ச்சையினால் 5 வருட போட்டித் தடைக்குள்ளாகி மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த ஆமிர், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக சிறப்பான முறையில் பந்துவீசி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அவ்வணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பாகிஸ்தான் ஒரு நாள் அணியில் விளையாடி வருகின்ற ஆமிர், இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட பாகிஸ்தான் ஒரு நாள் குழாமில் இடம்பெற்றிருந்த ஆமிருக்குப் பதிலாக, 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் கான் ஷின்வாரி பாகிஸ்தான் ஒரு நாள் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (09) அறிவித்தது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக…

இடதுகை மித வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான், கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணியுடனான T-20 போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும் இதுவரை 4 T-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள அவர், இவ்வருடத்துக்கான உள்ளூர் முதல்தர போட்டிளில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்மையில் நிறைவடைந்த உலக பதினொருவர் அணியுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க T-20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்த உஸ்மான், முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி 33 என்ற சராசரியுடன் 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது நடைபெற்றுவருகின்ற பாகிஸ்தானின் ஹபீப் வங்கி உள்ளூர் முதல்தரப் போட்டித் தொடரில் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தியுள்ள உஸ்மான், இப்பருவத்தில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட முதல்தரப் போட்டிகளில் (LIST A) 26.63 என்ற சராசரியுடன் 30 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ள வீரராவார்.