“சுபர் 4” முதல்தர கிரிக்கெட் தொடரின் சம்பியனாக காலி அணி

1067

இலங்கை கிரிக்கெட் சபை இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த மாகாண ரீதியிலான “சுபர் 4″ (நான்கு நாட்கள் கொண்ட) முதல்தர கிரிக்கெட் தொடரின் கடைசி வாரப் போட்டிகள் இரண்டும் இன்று நிறைவடைந்தன.

காலி எதிர் தம்புள்ளை

அம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் முடிவடைந்திருக்கும், காலி மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

எனினும், ஏற்கனவே இடம்பெற்ற இத்தொடரின் போட்டி முடிவுகளின் அடிப்படையில் கிடைத்த புள்ளிகளினால் மாகாண ரீதியிலான முதல்தர கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்தின் சம்பியனாக காலி அணி மாறியிருக்கின்றது.

இப்போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், காலி அணியின் முதல் இன்னிங்ஸ் (425), கண்டி அணியின் முதல் இன்னிங்ஸ் (185) என்பவற்றினை அடுத்து மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய  காலி அணியினர் 298 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளில் களத்தில் ரொஷென் சில்வா 88 ஓட்டங்களுடனும், தம்மிக்க பிரசாத் 9 ஓட்டங்களுடன் இருந்தவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை  தொடர்ந்த காலி அணி, 73.5 ஓவர்களில் 306 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது இரண்டாம் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இன்றைய நாளில், சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரொஷென் சில்வா 89 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான சாமிக்க கருணாரத்ன 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

முதல்தரப் போட்டிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சதம் கடந்த உபுல் தரங்க

காலி அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 547 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இமலாய இலக்கை அடைய பதிலுக்கு ஆட்டத்தில் ஒரு நாள் மாத்திரம் எஞ்சிய நிலையில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கண்டி அணிக்காக இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணியின் வீரர் பெதும் நிஸ்ஸங்க அபார சதம் கடந்து அசத்தினார். அத்தோடு, சரித் அசலங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் அரைச்சதங்கள் விளாசினர். மறுமுனையில் காலி அணியினால் இறுதி நாளில் எதிர்பார்த்த விதத்தில் விக்கெட்டுக்கள் எதனையும் சாய்க்க முடியவில்லை.

இதனால், போட்டியின் இறுதி நாள் ஆட்ட நிறைவின் போது கண்டி அணி 81 ஓவர்களில் 363 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்ததுடன், போட்டியும் சமநிலை அடைந்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது நின்றிருந்த பெதும் நிஸ்ஸங்க 3 சிக்ஸர்கள் 20 பெளண்டரிகள் அடங்கலாக 188 ஓட்டங்களைப் பெற்று முதல்தரப் போட்டிகளில் தனது சிறப்பான இன்னிங்சை பதிவு செய்ததோடு, சரித் அசலங்க 62 ஓட்டங்களையும் குவித்திருந்ததுடன், கண்டி அணி சார்பாக ஆட்டமிழக்காது நின்ற மற்றைய வீரரான திக்வெல்ல 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

காலி அணியின் பந்துவீச்சில் நிசல தாரக்க, நிஷான் பீரிஸ் மற்றும் லஹிரு மிலந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.


தம்புள்ளை எதிர் கொழும்பு

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் முடிவடைந்திருக்கும் இந்த ஆட்டத்தில், கொழும்பு அணியை 5 விக்கெட்டுக்களால் தம்புள்ளை அணி தோற்கடித்து, இந்தப் பருவகாலத்திற்கான மாகாண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அணியாகவும் மாறியிருக்கின்றது.

அத்தோடு இந்த வெற்றியுடனும், ஏற்கனவே இத்தொடரில் இடம்பெற்று முடிந்த போட்டிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அமைவாக வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலும், “சுபர் – 4″ கிரிக்கெட் தொடரில் இரண்டாம் இடத்தைப் தம்புள்ளை அணி பெற்றுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த கொழும்பு அணி முதல் இன்னிங்சுக்காக 210 ஓட்டங்களையும், பதிலுக்கு தம்புள்ளை அணி 359 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிலும் குவித்திருந்தது. பின்னர், இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய கொழும்பு அணியினர் 351 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த இன்னிங்சுகளின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக தம்புள்ளை அணிக்கு 203 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.

ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களைப் பெற இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடி வந்த தம்புள்ளை அணியினர், போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 43 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தனர்.

இறுதி நாளில் போட்டியில் வெற்றி பெற 160 ஓட்டங்களே தேவைப்பட களத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (19), குசல் மெண்டிஸ் (13) ஆகியோர் அந்த வெற்றி இலக்கு ஓட்டங்களை அடைவதற்காக  துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

இலங்கை அணியுடன் மீண்டும் பணியாற்ற வரும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

திமுத் கருணாரத்னவினால், இன்றைய நாளில் ஓட்டமேதும் குவிக்க முடியாத நிலையில் அவர் நேற்றுப் பெற்றிருந்த அதே 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் துரித கதியில் தம்புள்ளை அணி விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தும், குசல் மெண்டிஸ், சச்சித்ர சேரசிங்க ஆகியோர்  அரைச்சதங்கள் விளாசினர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியுடன், 48 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து தம்புள்ளை அணி 205 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது.

தம்புள்ளை அணியை வெற்றிப் பாதையில் நடாத்திய குசல் மெண்டிஸ் 7 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், சச்சித்ர சேரசிங்க 55 ஓட்டங்களையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு அணியின் பந்துவீச்சு சார்பாக எதிரணிக்கு அச்சுறுத்தல் ஒன்றை விடுத்திருந்த திக்ஷில டி சில்வா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

முடிவு – தம்புள்ளை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

நடைபெற்று முடிந்திருக்கும் இந்த மாகாண ரீதியிலான முதல்தர கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக, ரொஷேன் சில்வா காணப்படுகின்றார். மொத்தமாக 535 ஓட்டங்களை இத்தொடரில் குவித்திருக்கும் அவரின் துடுப்பாட்ட சராசரி 178.33 ஓட்டங்களாகும். இதேவேளை, இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக வேகப்புயல் நிசல தாரக்க காணப்படுகின்றார். தாரக்க இத்தொடரில் மொத்தமாக 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இந்த இரண்டு வீரர்களும் காலி அணியை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் 03ஆம் திகதி முதல் மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரின் புள்ளிகள் அட்டவணை