ஆஸி.யின் இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

Australia Tour of Sri Lanka 2022

233

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நடைபெறுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

இந்தத் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் நிலைமையை கவனம் செலுத்தி என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று T20i போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்வரும் ஜூன் 7 முதல் ஜூலை 12 வரை விளையாடவுள்ளது.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தத் தொடர் நடைபெறுவது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பாக, தற்போதைய மின் நெருக்கடியில் பகலிரவுப் போட்டிகளை நடத்த வேண்டுமா என்று இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புடைய தரப்பினர்கள் கேட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி, ஒருநாள் போட்டிகளை பகல் ஆட்டங்களாக மாற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மொஹான் டி சில்வா, போட்டிகளில் நேரங்களை மாற்றுவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார். எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபையானது தேசிய மின் விநியோகத்தை சார்ந்ததாக செயல்படும் நிறுவனம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

‘எங்களுக்கு சொந்தமாக ஜெனரேட்டர்கள் உள்ளன. நாங்கள் தேசிய மின் விநியோகத்தை சார்ந்திருக்கவில்லை. எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது இன்னொரு பிரச்சினை என இலங்கை தேசிய அணியின் முன்னாள் முகாமையாளர் சரித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை விளையாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை கிரிக்கெட் எப்போதும் பக்கச்சார்பற்றதாகவே உள்ளது’ என்று அவர் கூறினார்.

இதுஇவ்வாறிருக்க, போட்டிகளின் நேரங்களை மாற்றுவது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

போட்டியை பகல் ஆட்டம் அல்லது பகலிரவு ஆட்டமாக நடத்தலாமா என்பதை தொடரை நடத்துகின்ற நாடு தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கை சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தொடரை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என எமது பாதுகாப்புப் பிரிவின் தலைவர் உறுதிப்படுத்தினார். எனவே, எமது அணி ஜூன் மாதம் இலங்கைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் இந்த் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியிருந்தது. எனினும், ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கு கடும் வெப்பம் நிலவுவதால் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை முடிவு செய்திருந்தது.

இதனிடையே, இந்தத் தொடரை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் உறுதியாக இருந்தாலும், அடுத்த 30 நாட்களில் இலங்கையின் நிலைமையை பொறுத்தே தொடரை நடத்த முடியுமா என்பது தீர்மானி;க்கப்படும் என்று போட்டியின் அனுசரணையாளர்கள் கூறியதாக Cricbuzz இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் நிதிப்பிரச்சினை காரணமாக இந்தத் தொடரை நடத்துவது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் வெளிநாட்டு மதிப்பு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்தத் தொடருக்கான ஊடக அனுசரணை மாத்திரம் சுமார் 300,000 அமெரிக்க டொலர் மதிப்புடையதாக இருக்கும். அதேபோல, விளம்பரம் மற்றும் பிற வருவாய் வழிகள் மூலம் மொத்தம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் சபையால் திரட்ட முடியும்.

மறுபுறத்தில் போட்டியின் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். தொடரின் முடிவில், இலங்கை கிரிக்கெட்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை மிச்சப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது 50 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி மட்டுமே எஞ்சியுள்ளது, இது அதனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க தொகையாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<