பென் ஸ்டோக்ஸை விடுவித்தது நீதிமன்றம்

318
Image Courtesy - PA

பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரத்தில் இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் உடன் குற்றம் சாட்டப்பட்ட ரியான் அலி இருவரும் பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின் ஆறு ஆண் மற்றும் ஆறு பெண்கள் கொண்ட நீதிபதிகள் குழுவால் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.  

சாதனை மேல் சாதனை படைத்த இலங்கை

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் அதிகாலை வேளையில் ஸ்டோக்ஸ் மற்றும் அலி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.  

இந்த வழக்கு விசாரணை காரணமாக ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து அணிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவுக்கு எதிராக லோட்ஸில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை (18) ஆரம்பமாகவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி 4-0 என தோல்வியை சந்தித்த 2017-18 பருவத்தின் அவுஸ்திரேலியாவுக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணமும் ஸ்டோக்ஸுக்கு கிடைக்கவில்லை என்பதோடு அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர் அணிக்கு திரும்பினார்.

பிரிஸ்டலில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்துக்காக மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகள், ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் நான்கு டி-20 போட்டிகளில் விளையாட முடியாமல் போயுள்ளது.   

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) வெளியிட்டிருக்கும் சுருக்கமான ஊடக அறிவிப்பொன்றில், இந்த வழக்கு விசாரணையின் முடிவை அடுத்து ஸ்டோக்ஸ் தொடர்பான தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

கைகலப்பு தொடர்பில் ஸ்டோக்ஸின் வழக்கு முடிவுற்றிருக்கும் நிலையில் அவர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவின் விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.  

சட்ட செயல்முறைகள் முடிவுற்ற 48 மணி நேரத்திற்குள் இந்த கிரிக்கெட் ஒழுக்காற்றுக் குழு கூடி ஒரு வாரத்திற்குள் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையில் இருந்து கிரிக்கெட் ஒழுக்காற்று குழு சுயாதீனமாக செயற்படுவதோடு அதற்கான நிதியை கிரிக்கெட் சபை வழங்குகிறது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியை ‘வைட்வொஷ்’ செய்த இலங்கை

பிரிஸ்டல் நகரின் மெர்குகோ இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியில் ரியான் ஹேல்ஸ் மீது கையால் குத்தி தரையில் வீழ்த்தியதாகவும் தொடர்ந்து ரியான் அலியை தாக்கி வீழ்த்தியதாகவும் பென் ஸ்டோக்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

குறித்த கேளிக்கை விடுதியின் வாயில் காவலர் உள்ளே நுழைய அனுமதி மறுத்ததை அடுத்து ஸ்டோக்ஸ் கோபமடைந்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. பிரிஸ்டலில் நடந்த ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகளை, இங்கிலாந்து அணி வீழ்த்திய சில மணி நேரத்திற்கு பின்னர் ஸ்டோக்ஸ் சக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இந்த கேளிக்கை விடுதிக்கு சென்றபோதே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.     

வீதியில் வைத்து அலி மற்றும் ஹேல்ஸ் இருவர் மீதும் நினைவிழக்கும் வகையில் தாக்கியது குறித்து ஸ்டோக்ஸிடம் பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

அந்த சம்பவத்தின்போதுதான் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்ததாக உணர்ந்தேன் என ஸ்டோக்ஸ் நீதிபதிகள் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். அலி மற்றும் ஹேல்ஸ் ஓரினச் சேர்க்கை ஆடவர்களான வில்லியம் ஓ கோனர் மற்றும் கெய் பெரியை தூற்றி கூச்சலிட்டதை கேட்டே தான் செயற்பட ஆரம்பித்ததாகவும் ஸ்டோக்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்கவில்லை.  

இந்த சண்டையின்போது அலி போத்தல் ஒன்றை பயன்படுத்தி ஹேல்ஸை அச்சுறுத்தியதாகவும் பெரியின் தோள்பட்டையை தாக்கியதாகவும் வழக்குத்தொடுனர்கள் குற்றம்சாட்டினர்.  

ஸ்டோக்ஸுடனான கைகலப்பு காரணமாக அலியின் கண் இமைப்பகுதியில் காயம் ஏற்பட்டதோடு ஹேல்ஸ் நினைவற்றுக் கிடந்தார்.

இந்த காயங்கள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹேல்ஸின் பாதணியால் வந்திருக்கலாம் என்று ஸ்டோக்ஸின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சண்டையின் போது ஹேல்ஸ் உதைவது CCTV காட்சிகளில் தெரிந்தபோதும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.

நீதிபதிகளிடம் அலி அளித்த வாக்குமூலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ”யாருடனாவது சண்டையிட அதிக கோபத்தில் இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக அன்று இரவு என்ன நடந்தது என்ற ஞாபகம் ‘தெளிவில்லாமல்’ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   

ஓகோனர் மற்றும் பெரி மீது கூச்சலிட்டதாக கூறியதை மறுத்த அலி, ஹேல்ஸ் அவர்கள் மீது ‘எரிச்சல்’ அடைந்தார் என்று தெரிவித்தார்.

போத்தலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியது, தான் எடுத்த கடினமாக முடிவு என்று அவர் கூறினார்.

”அதிக அச்சுறுத்தலை உணர்ந்ததாலேயே நான் அதனைச் செய்தேன். விலகிப்போ என்று நான் கூறியது ஞாபகமிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க