இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கற்ற செயற்பாடுகளை மீண்டும் ஒருமுறை காண்பிக்கும் வகையில், டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்று தொடரின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால்பந்து கழகங்கள் மேற்கொண்ட எதிர்ப்புகள் மற்றும் தேசிய அணியின் அடுத்து வரும் சுற்றுப் பயணங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி மாலை இடம்பெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றின் சுப்பர் 8 சுற்றுக்களின் எஞ்சியுள்ள போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் ஏற்கனவே பல முறை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக இந்த வார இறுதியில் சுப்பர் 8 சுற்றின் இரண்டாம் வாரப் போட்டிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டமை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முறையற்ற தகவல் பரிமாற்றம் மற்றும் ஒழுங்கு முறையற்ற செயற்பாடுகள் என்பவற்றை காண்பிப்பதாகவே இருக்கின்றது.
 
எனவே, இந்த முடிவைத் தொடர்ந்து கால்பந்து சம்மேளனம் குறித்து பல தரப்பிலிருந்தம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கால்பந்து கழகங்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளன.
 
இலங்கை தேசிய கால்பந்து அணி வீரர்கள் எதிர்வரும் நாட்களில் கொலம்பியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ‘ஒற்றுமைக் கிண்ண’ தொடர் என்பவற்றில் பங்குபற்ற உள்ளனர். எனவே, அந்த வீரர்களை உபாதைகளில் இருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு அதிக அழுத்தங்களைக் கொடுக்காமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காகவே இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வர் உமர் thepapre.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது,
 
“நாம் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை ஆசிய கால்பந்து சம்மௌனத்தின் ‘ஒற்றுமைக் கிண்ண’ போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னரே நடத்;துவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எனினும் இந்த தீர்மானம் தொடர்பில் பலவகையான விமர்சனங்களும், விவாதங்களும் இருக்கின்றதை நாம் அறிவோம்.
 
தேசிய அணி வீரர்கள், வார நாட்களில் தேசிய அணிக்கான பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர் கழக அணிக்காக பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில் என்று கழகங்கள் விவாதித்து வந்தன” என்று அவர் குறிப்பிட்டார்.
 
சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரப் போட்டிகள் செப்டம்பர் 11ஆம் திகதி ஆரம்பமாவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஈதுல் அல்ஹா பெருநாள் இருந்தமையினால் குறித்த போட்டிகள் 13ஆம், 14ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டமை இங்கு நினைவு கூறத்தக்கது.
 
எனினும், தேசிய அணியின் பயிற்சிகள் வார நாட்களில் இடம்பெறுவதனால், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை அந்த தினங்களில் நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே சம்மேளனம் குறித்த போட்டிகளை 17ஆம், 18ஆம் திகதிகளில் நடத்த தீர்மானித்தது.
 
கால்பந்து சம்மேளனத்தின் போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய கால்பந்து அணியின் அதிகாரிகள் இடையில் முறையான ஒரு தொடர்பாடல் இல்லாமையின் காரணத்தினாலேயே இவ்வாறு உரிய முறையில் போட்டி இடம்பெறும் தினங்களை உறுதியாகக் கூற முடியாமல் போனது என்ற கருத்தே அனைவரிடமும் இருந்து வந்தது. மேலும், அனைவர் மத்தியிலும் ஒரு குழப்ப நிலையை உருவாக்குவதாகவே கால்பந்து சம்மேளனத்தின் இந்த செயற்பாடுகள் அமைந்திருந்தன.
 
எவ்வாறிருப்பினும், இந்த சுற்றுத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் எந்த வித சிக்கல்களும் இன்றி ஒரு சீரான முறையில் இடம்பெறும் என்றும், இதன்மூலம் ரசிகர்கள் சிறந்த போட்டிகளை கண்டுகளிப்பார்கள் என்றும் நம்பப்படுகின்றது. அவ்வாறு அமைவதே இலங்கை கால்பந்தின் எதிர்காலத்திற்கும் சிறந்ததாய் அமையும்.
 
2020ஆம் ஆண்டாகும்பொழுது இலங்கையில் கால்பந்து விளையாட்டை மிகவும் பிரபலமான விளையாட்டாக கொண்டு வருவதை இலக்காகக் கொண்டே கால்பந்து துறை சார்ந்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறான ஒரு நிலையில், இதன் பிறகு அவர்கள் தமது தொடர்பாடல் மற்றும் முகாமை என்பவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது.