சங்கக்காரவின் சாதனைப் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்

The Ashes 2023

185
Steve Smith becomes second quickest to reach 9000 Test runs

டெஸ்ட் கிரிக்கெட்டில் குமர் சங்கக்காரவிற்குப் பிறகு அதிவேகமாக 9 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். 

இங்கிலாந்துஅவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸுக்காக 416 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 325 ஓட்டங்களையும் குவித்தது 

91 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் காணப்படுகிறது.   

இந்த நிலையில், போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 32 ஓட்டங்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 9000 ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை அவர் 99 போட்டிகளில் விளையாடி 174 இன்னிங்ஸில் படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார (172 இன்னிங்ஸ்), இந்தியாவின் ராகுல் டிராவிட் (176 இன்னிங்ஸ்), மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (177 இன்னிங்ஸ்), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (177 இன்னிங்ஸ்) ஆகியோர் டெஸ்ட் அரங்கில் 9000 ஓட்டங்களைக் கடந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் 

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15 ஓட்டங்களைக் கடந்த 7ஆவது வீரர் என்ற சாதனையையும் ஸ்மித் படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், ஹசிம் ஆம்லா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார் 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 333 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரம் சர்வதேச ஓட்டங்களைக் கடந்திருந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 336 இன்னிங்ஸ்களிலும், மேற்கிந்திய தீவுகளின் விவ் ரிச்சர்ட்ஸ் 344 இன்னிங்ஸ்களிலும் கடந்திருந்தனர். 

இந்த நிலையில், தனது 32ஆவது சதத்தை விளாசிய ஸ்டீவ் ஸ்மித் 184 பந்துகளில், 15 பௌண்டரிகளுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலியா வீரர்களில் 4ஆவது இடத்தையும் அவர் பிடித்தார் 

அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ரிக்கி பொண்டிங் (168 போட்டிகள், 13378 ஓட்டங்கள்) முதலிடத்திலும், அலென் போர்டர் (156 போட்டிகள், 11174 ஓட்டங்கள்) இரண்டாமிடத்திலும், ஸ்டீவ் வோஹ் (168 போட்டிகள், 10927 ஓட்டங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர் 

34 வயதான ஸ்மித், கடந்த 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 9,054 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 31 சதங்கள் மற்றும் 38 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 239 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<