புதிய சாதனையை நிலைநாட்டவுள்ள நதன் லயன்

126

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான நதன் லயன் கிரிக்கெட் அணியொன்றுக்காக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதலாவது (Specialist Bowler) சிறப்பு பந்துவீச்சாளராக புதிய வரலாறு படைக்கவிருக்கின்றார்.   

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான நதன் லயன் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற பின்னர் தற்போது அணியின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகின்றார் 

உலகக் கிண்ணத்தில் ஆட அரச அனுமதி கோரியுள்ள PCB

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணி விளையாடியுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ள அவர், இன்று ஆரம்பமாகும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மூலம் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் சிறப்பு பந்துவீச்சாளர் என்னும் சாதனையை நிலைநாட்டுகின்றார் 

அதோடு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் அணியொன்றுக்காக ஓய்வின்றி 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஆறாவது கிரிக்கெட் வீரராகவும் நதன் லயன் சாதனை படைக்கவுள்ளதோடு ஆஸி. கிரிக்கெட் அணியில் இந்த சாதனையினை நிலைநாட்டிய மூன்றாவது வீரராக நதன் லயன் மாறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லினை நிலைநாட்டுவதற்கு நதன் லயனிற்கு இன்னும் 5 விக்கெட்டுக்கள் தேவையாக இருக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் 

முதல் முறையாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ICC உலகக் கிண்ணம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் நதன் லயனிற்கு முன்னதாக தொடர்ச்சியாக அணியொன்றுக்கு அதிக டெஸ்ட் போட்டிகளை ஓய்வின்றி ஆடிய வீரராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான் அலஸ்டையர் குக் காணப்படுகின்றார் 

அலஸ்டையர் குக் இங்கிலாந்து அணிக்காக 2006 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியில் விளையாடிய டெஸ்ட் போட்டிகள் மூலம் இந்த சாதனையினை நிலைநாட்டியதோடு, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட ஜாம்பவான் அலன் போர்டர் இந்தப் பட்டியலில் இரண்டாம் (153 போட்டிகள்) இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 

இவர்கள் தவிர அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வீரரான மார்க் வோ (107), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (106 போட்டிகள்) மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் பிரண்டன் மெக்கலம் (101 போட்டிகள்) ஆகியோரும் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் 100 மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை ஓய்வின்றி விளையாடிய வீரர்களாக காணப்படுகின்றனர் 

மறுமுனையில் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள ஆஸி. கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<