யாழ் மத்திய கல்லூரி அணி முன்னிலையில்

351
யாழ் மத்திய கல்லூரி அணி முன்னிலையில்

யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெறும் ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் நேற்று (10) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மத்திய கல்லூரி அணியின் தலைவர் எஸ்.அலன்ராஜ் தாம் முதலில் துடுப்பெடுத்தாட போவதாக கூறி இருந்தார். இதற்கமைய முதலில் தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணி சார்பாக ஜெரோசன் 51 ஓட்டங்களையும் கோமேதகன் 39 ஓட்டங்களையும் அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றனர். யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் ஜதூசன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், நிலோஜன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இனிங்ஸிற்காக துடுபெடுத்தாடிய யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பின் தனது ஆட்டத்தைத் தொடர்ந்த யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய 2ஆவது நாள் மதிய போசன இடைவேளைக்குள் தனது மிகுதி 6 விக்கட்டுக்களையும் இழந்தது. இதன் படி தமது முதல் இனிங்ஸில்  யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ். மத்திய கல்லூரி அணியை விட 2 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்று 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிருஷாந்தூஜன் 31 ஓட்டங்களையும் பந்துவீச்சில் சிறப்பாகப் பந்துவீசிய ஜதூசன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் தீபன்ராஜ் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் தஸோபன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் கைபற்றினார்.

இதன்பின் 2 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி இன்றைய 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 162 ஓட்டங்கள் முன்னிலையில் 6 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று இருந்தது. யாழ். மத்திய கல்லூரி அணியின் 2ஆவது இனிங்ஸில் துடுப்பாட்டத்தில்  அணியின் தலைவர் அலன்ராஜ் மற்றும் உப தலைவர் கோமேதகன் ஆகியோர் 34 ஓட்டங்களைப் பெற்றனர். ஆட்டமிழக்காமல்  கிருபாகரன் 31 பந்துகளில் அதிரடியாக துடுபெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.

நாளை போட்டியின் 3ஆவதும் இறுதியுமான நாளாகும். இந்த இறுதி நாளின் போட்டியையும் நேற்று மற்றும் இன்று போலவே  இலங்கையின் முதல்தர விளையாட்டு மையமான www.thepapare.com மூலம் உலகம் முழுவதிற்கும் நேரடியாக  பார்க்க கூடியதாக இருக்கும்.