இரு சதங்களுடன் இந்தியாவை இலகுவாக வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

156
©Cricbuzz

ஷிம்ரொன் ஹெட்மெயர் மற்றும் ஷை ஹோப் ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இந்திய அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களிலும் ஆடுகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் 2-1 என்ற அடிப்படையில் இந்தியா வசமான நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (15) ஆரம்பமானது. 

டி20 தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்கியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

இந்திய அணிக்காக கடந்த மாதம் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட சகலதுறை வீரர் சிவம் துபே இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக ஒருநாள் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்கள் ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டது. கே.எல் ராகுல் 6 ஓட்டங்களுடனும், நம்பிக்கை துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி 4 ஓட்டங்களுடனும் அரங்கம் திரும்பினர். 

மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக ரோஹித் சர்மா மற்றும் ஷிரேயஸ் ஐயர் ஆகியோருக்கிடையில் 55 ஓட்டங்கள் பகிரப்பட இந்திய அணி வலுவான நிலைக்கு சென்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்காக ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. 

ஷிரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரைச்சதம் கடந்ததுடன் இருவரும் இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். ஒருநாள் சர்வதேச அரங்கில் 5ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த ஐயர் 1 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 70 ஓட்டங்களை பெற்று 37ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஒருநாள் சர்வதேச அரங்கில் கன்னி அரைச்சதம் கடந்த ரிஷப் பண்ட் 1 சிக்ஸர், 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களுடன் ஐயரை தொடர்ந்து 40ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்காக இணைந்த கேதர் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஜோடி 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

நிதானமாக துடுப்பெடுத்தாடிய கேதார் யாதவ் 1 சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அதே ஓவரில் அடுத்த பந்தில் 21 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி ஓவரில் கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய சிவம் துபே 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கீமோ போல், அல்சாரி ஜோசப் மற்றும் ஷெல்டன் கொட்ரல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும், கிரண் பொல்லார்ட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 288 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. 

ஐந்தாவது ஓவரில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் அம்பிரிஸ் 9 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப்புடன் இணைந்த ஷிம்ரொன் ஹெட்மெயர் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிக பலமாக அமைந்தது. 

இளம் துடுப்பாட்ட வீரரான ஷிம்ரொன் ஹெட்மெயர் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்ய, மறுமுனையில் ஷை ஹோப் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 8ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். சதம் கடந்த ஷிம்ரொன் ஹெட்மெயர் 7 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகளுடன் 139 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இது ஹெட்மெயரின் அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்டமுமாகும்.

மூன்றாவது விக்கெட்டுக்காக ஷை ஹோப்புடன் இணைந்த நிக்கொலஸ் பூரண் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்களை பகிர்ந்து 13 பந்துகள் மீதமிருக்க மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியை 8 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். ஆடுகளத்தில் ஷை ஹோப் 1 சிக்ஸர், 7 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களுடனும், நிக்கொலஸ் பூரண் 4 பௌண்டரிகளுடன் 29 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந்திய அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சஹார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ஏனைய பந்துவீச்சாளர்களில் எவராலும் விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியவில்லை. போட்டியின் ஆட்ட நாயகனாக சதமடித்து அசத்திய ஷிம்ரொன் ஹெட்மெயர் தெரிவானார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் 1-0 என்ற அடிப்படையில் அவ்வணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (18) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.    

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 287/8 (50) – ரிஷப் பண்ட் 71(69), ஷிரேயஸ் ஐயர் 70(88), கிமோ போல் 2/40(7), அல்சாரி ஜோசப் 2/45(9), ஷெல்டன் கொட்ரல் 2/46(10)

மேற்கிந்திய தீவுகள் – 291/2 (47.5) – ஷிம்ரொன் ஹெட்மெயர் 139(106), ஷை ஹோப் 102(151), தீபக் சஹார் 1/48(10), மொஹமட் ஷமி 1/57(9)

முடிவு – மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுக்களினால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<