IPL தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

India tour of West Indies 2023

112

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள T20i தொடருக்கான இந்திய குழாத்தில் IPL தொடரில் பிரகாசித்த யசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும்  டெஸ்ட் குழாம்களை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருந்த போதும், அஜித் அகார்கர் தலைமையிலான புதிய தேர்வுக்குழு T20i தொடருக்கான குழாத்தை தெரிவுசெய்தது.

ஜூன் மாத சிறந்த வீரர்கள் பரிந்துரையில் வனிந்து

புதிய தேர்வுக்குழு தெரிவுசெய்துள்ள குழாத்தை பொருத்தவரை முக்கிய மாற்றமாக IPL தொடரில் பிரகாசித்த இளம் வீரர்களான மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்தியவரிசை வீரராக விளையாடிய திலக் வர்மா மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த இரண்டு வீரர்களுடன் இந்திய கிரிக்கெட்டில் அதிகமாக பேசப்பட்டுவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் உப தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டுள்ளதுடன், இளம் வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி செல்லவுள்ளது.

இந்திய அணியின் அனைத்துவகை போட்டிகளுக்குமான தலைவராக செயற்பட்டுவந்த ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் தலைவரும் அனுபவ துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி ஆகியோர் இந்த குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய வொசிங்டன் சுந்தர், பிரிதிவி ஷோவ், ராஹுல் டிரிபாதி, ஜித்தேஷ் சர்மா மற்றும் சிவம் மாவி ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 2 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட T20i தொடர் ஆரம்பமாகிறது. குறித்த இந்த ஐந்து போட்டிகளும் ஆகஸ்ட் 3ம் திகதி முதல் 13ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா T20i குழாம்

இசான் கிஷன், சுப்மான் கில், யசஷ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சம்சன், ஹர்திக் பாண்டியா (தலைவர்), அக்ஷர் படேல், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், அர்ஷ்டீப் சிங், உம்ரான் மலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<