”ரூட் மற்றும் வில்லியம்சனை பின்பற்ற வேண்டும்” – ஹதுருசிங்க

1209

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி இதுவரையில் துடுப்பாட்டத்தில் 300+ ஓட்டங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், இன்று (28) நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் குறித்த இலக்கை எட்ட முடியும் என இலங்கை அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான டர்ஹாம் – ரிவர்சைட் மைதானத்தின் ஆடுகளத்தில் இலங்கை அணியின் வீரர்கள் தங்களுடைய துடுப்பாட்ட திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இன்று எதிர்பார்த்துள்ளனர்.

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் ……….

அரையிறுதிக்கான வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்துள்ள நிலையில், இலங்கை அணி ஆறு புள்ளிகளுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. கடந்த போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தாலும், துடுப்பாட்டத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

கடந்த போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பங்கினை நிறைவேற்ற, துடுப்பாட்டம் ஒரு சில இடங்களில் மாத்திரமே வெளிப்பட்டு வருகின்றது. முதல் 3 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸுடன் இளம் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் பிரகாசித்திருந்தனர். 

இவ்வாறு துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொரு போட்டிகளிலும் தனித்தனியாக ஓட்டங்களை குவித்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் ஒன்றிணைந்து ஓட்டங்களை குவிக்க வேண்டும் என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோரை முன்மாதிரியாக கொண்டு ஓட்டங்களை குவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அணியின் அனுபவ வீரர்கள் முக்கியமான தருணங்களில் முன்வந்து செயற்பட வேண்டும். அவர்களது சிறப்பான ஆட்டங்கள் அணிக்கு வலுசேர்ப்பதுடன், அவர்களின் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியமாகும். கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை எடுத்துக்கொண்டால் அவர்கள் அணிக்காக சரியான தருணங்களில் ஓட்டங்களை சேரக்கின்றனர். அதனால், அவர்களை ஆரம்பத்தில் ஆட்டமிழக்கச் செய்ய எதிரணிகள் முனைகின்றனர். இதனை நாமும் பின்பற்ற வேண்டும்” என ஹதுருசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த போட்டியில் (இங்கிலாந்து) அஞ்செலோ மெதிவ்ஸ், சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தொடரின் ஆரம்பத்தில் ஓட்டங்களை குவிக்க தவறியிருந்த அவர், பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் இவ்வாறு ஓட்டங்களை குவித்தமை அவருக்கு மேலும் நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.

எதிரணியின் திட்டத்திலிருந்து தப்புவது எப்படி? – அவிஷ்கவுக்கு மாலிங்க அறிவுரை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ……..

“அனுபவ வீரரான மெதிவ்ஸ் கடந்த போட்டியில் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களை பகிர்ந்திருந்தார். குறித்த போட்டியில் (இங்கிலாந்து) மெதிவ்ஸ் நேர்த்தியாக ஆடவில்லை என்றாலும், அவர் துடுப்பெடுத்தாடிய விதம் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த போட்டியை பொருத்தவரை இணைப்பாட்டங்களை பகிர்வது தொடர்பில் நாம் அதிகம் கலந்துரையாடியுள்ளோம். இதன்படி, இணைப்பாட்டங்களை பகிர்ந்து, இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது அணிக்கு மிக முக்கியமாகும்” என ஹதுருசிங்க மேலும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத்தின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பை நோக்கி இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<