ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை T20 குழாத்தில் வியாஸ்காந்த்

347

ஆசிய விளையாட்டு விழாவின் (Asian Games) கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கையின் மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

>> சாதனை வெற்றியுடன் ஆசியக் கிண்ண சம்பியன்களான இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இருவருக்கும் T20 கிரிக்கெட் தொடராக இம்முறை நடைபெறவிருக்கின்றது. இதில் ஆடவருக்கான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 27 தொடக்கமும், மகளிருக்கான தொடர் நாளை (19) தொடக்கமும் சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெறுகின்றது.

அதன்படி இந்த ஆசிய விளையாட்டு விழாவில் பங்கெடுக்கும் இலங்கையின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தொடரில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைவராக சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரர் சஹான் ஆராச்சிகே தெரிவு செய்யப்பட்டிருக்க, மகளிர் அணியினை சமாரி அத்தபத்து வழிநடாத்துகின்றார்.

இதேநேரம் இலங்கை குழாத்தில் வட மாகாணத்தினைச் சேர்ந்த சுழல்வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வியாஸ்காந்த் இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியொன்றை (A கிரிக்கெட் அணியை) பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை முதன் முறையாகப் பெற்றிருக்கின்றார்.

அதேநேரம் தேசிய அணி வீரர்களான நுவனிது பெர்னாண்டோ, அஷேன் பண்டார மற்றும் நுவான் துஷார ஆகியோரும் இலங்கையின் ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை கிரிக்கெட் குழாத்தில்

இணைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஒரு பக்கமிருக்க இலங்கை மகளிர் தரப்பினை அனுபவ வீராங்கனைகளான இனோக்கா ரணவீர, நிலக்ஷி டி சில்வா மற்றும் ஒசாதி ரணசிங்க ஆகியோர் பலப்படுத்துகின்றனர்.

இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஆசிய விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு நேரடியாக தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆடவர் அணி

லசித் குரூஸ்புள்ளே, செவோன் டேனியல், அஷேன் பண்டார, சஹான் ஆராச்சிகே (தலைவர்), அஹான் விக்ரமசிங்க, லஹிரு உதார, ரவிந்து பெர்னாண்டோ, ரணித லியனராச்சி, நுவனிது பெர்னாண்டோ, சஜித்த ஜயத்திலக்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரக்கோன், நுவான் துஷார, இஷித விஜேசுந்தர

இலங்கை மகளிர் அணி

சமாரி அத்தபத்து (தலைவி), ஹர்சித சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, இமேஷா துலானி, அனுஷ்கா சஞ்சீவனி, ஓசதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, உதேசிகா ப்ரபோதினி, ஹாசினி பெரேரா, கௌசினி நுத்யாங்கனா, அச்சினி குலசூரிய, இனோஷி பெர்னாண்டோ

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<