இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ருமேஷ் தகுதி

 Indian Open 2025 World Athletics Bronze Level Continental Tour

272

இந்தியாவின் புவணேஸ்வர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய பகிரங்க உலக மெய்வல்லுனர் வெண்கல சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று அசத்தியது.  

இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, இலங்கை சாதனையை முறியடித்து, ஜப்பானில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றுக் கொண்டார்.   

அதேபோல, ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பிரபல இந்திய அணியை இலங்கையின் கனிஷ்ட அணி வீழ்த்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது 

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பை இலக்காகக் கொண்டு இந்திய மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பகிரங்க உலக மெய்வல்லுனர் வெண்கல சம்பியன்ஷிப் தொடர் கடந்த 10ஆம் திகதி புவணேஸ்வரில் உள்ள காலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கையிலிருந்து 9 வீர, வீராங்;கனைகள் பங்குபற்றினர் 

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 86.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ருமேஷ் தரங்க, புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் தியகமவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க நிலைநாட்டிய 85.78 மீற்றர் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. அத்துடன், இலங்கை வீரர் ஒருவர் இப்போட்டியில் எறிந்த சிறந்த தூரமாகவும் இது பதிவாகியது 

மறுபுறத்தில் இப்போட்டியில் ருமேஷ் தரங்க பதிவு செய்த தூரமானது உலகளவில் 7ஆவது இடத்தையும், சுமேத ரணசிங்கவின் தூரமானது உலகளவில் 10ஆவது இடத்தையும் பிடித்தது.    

அதேபோல, இப்போட்டியில் 80.65 மீற்றர் தூரம் எறிந்த சுமேத ரணசிங்கவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. தற்போது இருவரும் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு நேரடி தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, 4×400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 3 நிமிடங்கள் 8.22 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் ஒமெல் டி சில்வா, சதேவ் ராஜகருணா, இமேஷ் திஸ்மித்த, கல்ஹார இந்துப்ப சில்வா ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வீரர்களில் சதேவ் ராஜகருண (குருநாகல், சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலை), ஒமெல் டி சில்வா (கந்தானை புனித செபஸ்தியார்), கல்ஹார இந்துப்ப (கோட்டே, ஆனந்த சாஸ்த்ராலயா) ஆகியோர் பாடசாலை மாணவர்களாவர்.  

அருண தர்ஷன, காலிங்க குமாரகே மற்றும் அயோமல் அகலங்க உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இப்போட்டியில் இருந்து விலகியிருந்த நிலையில், இலங்கையின் கனிஷ்ட வீரர்கள் இந்த வெற்றியைப் பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஈராக் அணி வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டது. 

இது தவிர, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் (10.43 செக்.) சமோத் யோதசிங்க வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேகம்கே (54.96 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர் 

இதனிடையே, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நிஷேந்திரா ஹேரத் (54.49 செக்.) 6ஆவது இடத்தைப் பிடித்தார்.